சமரசிங்கவின் உரையையடுத்து பல நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம்

ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது அமர்வின் போது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிக்க ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேசியா போன்ற முஸ்லிம் நாடுகள் உறுதியளித்துள்ளன.

தாய்லாந்தும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்கும் வகையில் வாக்களிப்பதாக அறிவித்துள்ளதாக இலங்கைத் தூதுக் குழுவுடன் ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தெரிவித்தனர். மனித உரிமைப் பேரவையில் இலங்கைத்தூதுக் குழுத் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரையை நாடுகள் பலவும் பாராட்டியுள்ளன.

இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவது தவறானது எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை செயற்படுத்த அவகாசம் வழங்க வேண்டும் எனவும் நடுநிலையான நாடுகள் பலவும் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது அமர்வு நேற்று முன்தினம் ஜெனீவாவில் ஆரம்பமானது. இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா, ஜீ. எல். பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் அடங்கலாக 52 பேர் கொண்ட குழு ஜெனீவா சென்றுள்ளது.

அமெரிக்கா உட்பட மேலைத்தேய நாடுகள் இலங்கைக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணை ஒன்றை கொண்டு வர தயாராகி வருகின்றன. இதற்கு எதிராக நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைத் தூதுக்குழு பல்வேறு மட்டங்களில் பேச்சு நடத்தி வருகிறது. தனித்தனிக் குழுக்களாகவும் தூதுக் குழுவாகவும் இலங்கைக் குழுவினர் பல்வேறு நாட்டு பிரதி நிதிகளுடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தி வருகின் றனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அடங்கலான குழுவினர் முஸ்லிம் நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தினர்.

கட்டார் வெளிவிவகார அமைச்சர் கலீத் பின் முஹம்மத் அல் – அதீயா, சவூதி அரேபிய அமைச்சர் பந்தர் பின் முஹம்மது அல் அபான், மலேசிய வெளிநாட்டமைச்சர் ஹனிபா அமான், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி மற்றும் அந்நாட்டு தூதுவர்களுடன் முஸ்லிம் அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியதாக பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக்குழு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் சுரபெங் டெவிசக்கை சந்தித்த போது இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். மனித உரிமை பேரவை கூட்டத்தில் அவர் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றியதாகவும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏனைய நாடுகளை கோரியதாகவும் ஹிஸ்புல்லாஹ் கூறினார். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்தத் தேவையான உதவிகளை வழங்கவும் தாய்லாந்து அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஐ. நா. வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரையை பல நாடுகள் பாராட்டியுள்ள அதேவேளை முன்னைய நிலைப்பாட்டை மாற்றி அவை இலங்கைக்கு சார்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இலங்கைக்கு எதிராக மேற்கத்திய வல்லரசுகள் சில முன்னெடுக்கும் செயற்பாடுகளை தோல்வியடையச் செய்ய ஈரான் எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவுமென ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி இலங்கை அமைச்சர்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக ஜெனீவா சென்றுள்ள இலங்கையின் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய முன்னேற்றம் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் உச்ச நிலையில் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து அமைச்சர்கள் மேலும் விளக்கமளித்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். ஈரான் தமது ஆதரவையும், தம்மோடு நெருக்கமாக செயற்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளிடமும், இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் செயற்படுவதற்கான தெளிவான விளக்கங்களையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சர் சலாஹி பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்றும் இலங்கைக்குழு பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தியது.

ஐ. நா. மனித உரிமை அமர்வுகள் மார்ச் 23 ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply