தமிழ் சிஎன்என் மீது இணையப்போர்
கடந்த 25 ஆம் திகதி முதல் இணையப் போர் ஒன்றை தமிழ் சிஎன்என் மீது சில தீய சக்திகளால் தொடுக்கப்பட்டுள்ளது. இப்போர் தற்போது வரை இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
இத்தீய சக்திகளைச் சேர்ந்த பலரும் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள். இவர்கள் மீது பொலிஸ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இவர்கள் சம்பந்தப்பட்ட விபரங்களை தற்போது வெளியிடுகின்றமை விசாரணைகளுக்கு பங்கத்தை ஏற்படுத்தக் கூடும் என தமிழ் சிஎன்என் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கை வருமாறு;
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முந்திய சில நாட்களில் இருந்து தமிழ். சி. என். என் இணையத் தள செய்திச் சேவை நிறுவனத்தை முடக்குவதற்கு சர்வதேச மட்டத்தில் சில தீய சக்திகள் பகீரத முயற்சிகளை தொழிநுட்ப ரீதியாக மேற்கொண்டு வந்திருக்கின்றன.
கடந்த 25 ஆம் திகதி முதல் இவை இணையப் போர் ஒன்றை தமிழ். சி. என். என் மீது தொடுத்தன. இப்போர் தற்போது வரை இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
இன்று தமிழ் இணையத் தளங்களுக்குள் முன்னிலை வகிக்கின்ற செய்தித் தளம் தமிழ். சி. என். என் ஆகும். ஆனால் நீதி, நேர்மை, நடுநிலைமை ஆகியவற்றை நாம் தாரக மந்திரமாக கொண்டு உடனுக்குடன் உண்மைச் செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகின்றோம். எமது செய்திகள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு, விறுவிறுப்பு, சர்ச்சை ஆகியவற்றை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.
கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாதவர்கள், தமிழ் சி. என். என் இன் பிரமாண்டமான வளர்ச்சியையும், எழுச்சியையும் பொறுக்க முடியாதவர்கள் தமிழ் சி. என். என் ஐ முடக்க கிளம்பி இருக்கின்றனர். இது ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்டு இருக்கின்ற பாரிய தாக்குதலே ஆகும்.
ஆனால் சந்திரனைப் பார்த்து நாய் குரைத்து சந்திரனுக்கு எதுவும் நடக்கப் போவது இல்லை. இவர்களின் குறுக்கீடுகளால் ஏற்பட்ட தடைகள், தடங்கல்கள், இடையூறுகள் ஆகியன எமது வாசகர்களை பாதிக்காத வகையில் எமது தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர். அவ்வப்போது ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம்.
இத்தீய சக்திகளின் செயல்பாடுகளை முறியடிக்க தமிழ். சி. என். என் திடசங்கற்பம் பூண்டு அதிரடி நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொண்டு உள்ளது. தமிழ். சி. என்.என் தரப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்து பிரித்தானிய மற்றும் அமெரிக்க பொலிஸார் இத்தீய சக்திகளை கண்டுபிடிக்கின்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இப்பொலிஸாரின் உதவி மற்றும் ஒத்தாசையுடன் அமெரிக்காவின் சர்வதேச பிரசித்தி வாய்ந்த முதனிலை தொழிநுட்ப புலனாய்வு நிறுவனம் ஒன்று இத்தீய சக்திகளை அம்பலப்படுத்துகின்ற முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு உள்ளது.
இத்தீய சக்திகளைச் சேர்ந்த பலரும் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள். இவர்கள் மீது பொலிஸ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இவர்கள் சம்பந்தப்பட்ட விபரங்களை தற்போது வெளியிடுகின்றமை விசாரணைகளுக்கு பங்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இத்தீய சக்திகள் யார்? என்கிற முழு விபரங்களையும் இவ்விசாரணைகள் பூர்த்தியான பின்னர் நாம் வெளிப்படுத்துவோம்.
எத்தனை இடர்கள் வந்தாலும் தமிழ். சி. என். என் அத்தனை இடர்களையும் முறியடித்து செய்திப் பணிகளை இப்போதும் எப்போதும் தொடரும் என எம் இனிய வாசகப் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply