ஜெனிவா விவகாரங்களை கையாள தமரா குணநாயகம் நியமிப்பு

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட இராஜதந்திரிகள் குழுவொன்றை நியமித்திருக்கும் அரசு, அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் இலங்கைக்கான தூதுவர் தமரா குணநாயகத்திடம் ஒப்படைத்திருப்பதாக தெரியவருகிறது.

இதன்படி இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விடயங்களைத் தமரா தலைமையிலான குழுவே கையாளும் எனத் தெரிகிறது.

முன்னதாக ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் இலங்கைக்கான தூதுவர் தமரா குணநாயகமே இலங்கை அரசின் சார்பில் உரையாற்ற வேண்டுமென அரச உயர்மட்டம் பணிப்புரை விடுத்திருந்தது. தமிழர் ஒருவர் அரச சார்பில் உரையாற்றுவதில் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நல்லெண்ணம் உருவாகுமென கருதியது.

எனினும் ஜெனிவா சென்றிருந்த உயர்மட்ட அமைச்சர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் மற்றும் தவறான தொடர்பாடல்கள் காரணமாக ஜெனிவா தூதுவருக்கு ஆணைக்குழு அமர்வின் ஆரம்ப உரையை மேற்கொள்ள முடியாமற் போனது.

இவ்வாறான நடவடிக்கையை அடுத்து கடும் அதிருப்தியடைந்திருக்கும் அரசு, ஜெனிவாவிற்குச் சென்ற அமைச்சர்கள் குழுவை உடனடியாகத் திருப்பியழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதேசமயம், விசேட இராஜதந்திரிகள் குழுவொன்றையும் நியமித்தது.

தற்போது இராஜதந்திரிகள் குழுவுக்குத் தலைமை வகிக்கும் தமரா குணநாயகம் சுமார் ஏழு சர்வதேச மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராவார். இவர் மேற்கொள்ளும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைக்குமென அரசு நம்புவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று மாலை கருத்து தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply