வடக்கு கிழக்கில் படைகளை குறைக்கத் திட்டம்
வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையையும், படை முகாம்களையும் குறைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு, அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கள நிலைமைகளுக்கேற்ப, முழுமையான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை இராணுவம் தற்போது தயாராகியுள்ளதாகவும் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியுள்ளார்.
வெள்ளவாயவில் 5வது கெமுனுவோச் பற்றாலியன் தலைமையகத்தில் நேற்று இலங்கை படையினர் மத்தியில் உரையாற்றும் போதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
வடக்கில் போர் முடிவுகள் வந்த நிலையிலும், அங்கு பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இலங்கை இராணுவத் தளபதி தகவல் வெளியிடுகையில்,
“வடக்கு,கிழக்கில் உள்ள பல்வேறு றெஜிமென்ட்களின் எண்ணிக்கையும், பிரதேச படைத் தலைமையகங்களினதும், படையினரதும் எண்ணிக்கையும் குறைக்கப்படவுள்ளன.
மிகவும் தேவையான தலைமையகங்களில் மேலதிகமான பற்றாலியன்களை ஒன்றிணைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுபோன்ற இடங்களில் திருமணத்துக்குப் பின்னர் அதிகாரிகளும் படையினரும் குடும்பங்களுடன் தங்கியிருக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.
போர்முனையில் போரிட்ட சிறப்புத் தேர்ச்சி பெற்ற படையினர் தனியான பாதுகாப்பு கட்டமைப்புகளில் நிறுத்தப்படவுள்ளனர்.
ஏனைய உதவிப் படையினர் இலங்கை முழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.“ என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply