தீ விபத்து தொடர்பில் விசாரணை தேவை

மன்னார் தினச்சந்தை வியாபார நிலையம் மீது பரவிய தீ நாசகாரச் செயலாக இருக்குமானால் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இச்சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60 வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கடன்களுக்கும் சுமைகளுக்கும் மத்தியில் பொருட்களை கொள்வனவு செய்து நாளாந்தம் செய்யும் வியாபாரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயினை வைத்து தமது வாழ்க்கைச் செலவை நடத்தி வருகின்றனர்.

இத்தினச்சந்தை வியாபார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இத்தீ விபத்து காரணமாக 35 வர்த்தக நிலையங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இச்சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவமாக இருக்குமாயின் யாராக இருந்தாலும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply