இலங்கை பிரமுகர்கள் வருகை : ஜெயா பிரதமருக்கு கடிதம்
இலங்கையிலிருந்து பிரமுகர்கள் தமிழத்துக்கு விஜயம் செய்யும் போது, தமிழக அரசுடன் கலந்தாலோசித்த பிறகு அனுமதி வழங்கினால் நல்லது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.அந்நாட்டிலிருந்து பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதையும் இந்திய மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது எனவும் தமிழக முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் அங்கு கண்ணியமான முறையில் வாழ இலங்கை அரசு வழி செய்யவில்லை என்கிற பொதுவான புரிதல் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்களிடையே இருப்பதாகவும் தனது கடிதத்தில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள மக்களுக்கு இணையான தகுதியை இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு அங்குள்ள அரசு வழங்கவில்லை என்று தமிழகத்திலுள்ள தமிழர்கள் வருந்துவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் மனநிலை அவ்வாறான நிலையில் இருக்கும் போது, இலங்கையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் தனிப்பட்ட முறையில் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதாகவும் எனக் கூறியுள்ள ஜெயலலிதா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர் திருக்குமரன் நடேசன் அண்மையில் இராமேஸ்வரம் வந்தபோது சிலரால் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
அவரது வருகை குறித்து இந்திய அரசிடமிருந்தோ, இலங்கை அரசிடமிருந்தோ எவ்விதமான தகவலும் இல்லாத நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும் அந்தச் சம்பவம் தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதரும், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலரும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதங்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் நியாயமற்றது, தேவையற்றது எனவும அவை ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தனது கடிதத்தில் தமிழக முதலவர் குறை கூறியுள்ளார்.
ஆனால் அக்கடிதங்களில் என்னவிதமான கருத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விளக்கமேதும் அளிக்கப்படவில்லை.
எவ்வாறு இருந்தாலும் இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகளோ, இராணுவ அதிகாரிகளோ அல்லது வேறு பிரமுகர்களோ மாநில அரசுக்கு தகவல் கொடுக்காமல் வந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது எனவும் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply