ஜோசேப்பு ஆண்டகை தொடர்பில் ஹெல உறுமய தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு
மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருக்கும் கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தெரிவிப்பதற்கு பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவிற்கு அருகதையில்லை.
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனிதப்படுகொலைக்கும் மூலகாரணமாக அமைந்தவர்களே இந்த போரினவாத ஜாதிக ஹெல உறுமய குழுவினர்.
வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து படுகொலை செய்வதற்கு மூலகாரணமாக விளங்கியவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியினரே என்பதனை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டுள்ளது.
யுத்தம் உக்கிரமாக இடம்பெற்ற காலப்பகுதிகளிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் இலங்கை கத்தோலிக்க ஆயர்மன்றத்தினதும் மன்னார் ஆயர் உள்ளிட்ட தமிழ் கத்தோலிக்க ஆயர்களினதும் கிறிஸ்து பிறப்புகால மற்றும் புதுவருடத்தை ஒட்டி மோதல் தவிர்ப்பினை கடைப்பிடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அரசாங்கத்தினால் உதாசினம் செய்யப்பட்டபோது இந்த ஜாதிக ஹெல உறுமய எங்கு போய் ஒழிந்துகொண்டது.
பௌத்த தர்மத்தினையும், அரசியல் அமைப்பினையும் மீறித்தானே அரசாங்கத்தினால் சொந்த நாட்டு மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.அப்போது எங்கோ போய் ஒழிந்து கொண்டது இவர்கள் சொல்லும் அரசியலமைப்பு.
இறுதிக்கட்ட யுத்தத்தினை சாட்டாகக்கொண்டு வன்னிப்பெருநிலப்பரப்பின் மீது விதிக்கப்பட்டிருந்த திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தடை, மருத்துவ தடை,உள்ளிட்ட மனித நேயத்திற்கு முரணான செயற்பாடுகளை ஒருநாட்டின் அரசாங்கம் முன்னெடுத்திருந்த போது தனிமனிதனாக வன்னிக்காடுகளுக்குள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை தேடி அலைந்து அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை நேரடியாக கண்டு மன தையிரத்தையும் ஏனைய உதவிகளையும் கொடுத்து மனிதநேயம் என்றால் இதுதான் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய மன்னார் ஆயர் அவர்களுக்குத்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை கேட்கின்ற உரிமையும் கடமையும் இருக்கின்றது.
அதற்காக அவர் உள்நாட்டில் பலதடவைகள் பல உயர்மட்டங்களை சந்தித்திருக்கின்றார்.தமது நியாயமான கோரிக்கைகளை அவர்கள் முன் சமர்ப்பித்திருக்கின்றார். இறுதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் மன்னாரில் இடம்பெற்ற போதும் அதன் முன் பிரசன்னமாகி தமது கருத்துக்களை ஆவணமாக சமர்ப்பித்திருந்தார்.
இவ்வாறு மக்கள் பற்றியும் அவர்களது உரிமைகள்;, அன்றாட வாழ்வியல் பற்றியும் சிந்தித்து செயலாற்றிக்கொண்டிருக்கின்ற ஒரு மதத்தலைவரான மன்னார் ஆயர் அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கூறுவதை மனசாட்சி உள்ள பெரும்பான்மையினர் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதையே நாம்தெரிவித்து நிற்கின்றோம்.
உள்நாட்டில் நாம்வாழும் சூழலில் நமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தை நாடுகின்றோம். அதே போன்றுதான் சர்வதேச மயமாகிப்போன தமிழர் விவகாரத்திற்கு நீதியுடன் கூடிய தீர்வு கிட்ட வேண்டுமாயின் சர்வதேச சமூகத்தை நாடுவது ஒன்றும் தவறில்லை.
எனவே மன்னார் ஆயர் உற்பட மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த தரப்பினர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் இச்செயற்பாடுகளை நாம் வண்மையாகக்கண்டிக்கின்றோம்.
இது தொடரும் பட்சத்தில் இதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீதியில் இறங்கி போராட்டத்தை நடத்தவும் தயாரகவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply