இலங்கை செல்லத் தயார்: நவநீதம் பிள்ளை உறுதி

ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் ஐகமிஷனர் நவநீதம் பிள்ளை, இலங்கைக்கு வருகை தரத் தயார் எனவும், எனினும், தேதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 19வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இத்தீர்மானத்திற்கு ஆதரவு திரட்ட அமெரிக்கா தரப்பிலும், எதிர்ப்பு திரட்ட இலங்கை தரப்பிலும், பல்வேறு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, நடந்து வருகின்றன.இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் குறித்த ஒரு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதில், மனித உரிமைகள் கவுன்சில் ஐகமிஷனர் நவநீதம் பிள்ளை, தமிழர் அமைப்புகள், அரசு சார்பற்ற அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அப்போது, கடந்த ஓராண்டு காலமாக காணாமல் போன தனது கணவர் குறித்து, ஒரு சிங்களப் பெண் அங்கு பேசினார்.

தொடர்ந்து, இதுபற்றிய விவாதங்கள் நடந்த போது, சிங்களப் பத்திரிகையான, “லக்பீமா’ ஆசிரியர் ராஜ்பால் அபிநாயக்க எழுந்து, விடுதலைப் புலிகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். அவருக்கு ஆதரவாக சிலர் பேச, எதிராக சிலர் பேச, கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மற்றொரு கூட்டத்தில், தமிழ் மனித உரிமைகள் ஆர்வலர் கிருபாகரன் என்பவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நவநீதம் பிள்ளை, “இலங்கை அரசு என்னை அங்கு வரும்படி அழைத்துள்ளது. இதற்கான அழைப்பு, இந்தக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பே எனக்கு வந்துவிட்டது. நான் இலங்கை செல்லும் முன், எனது அலுவலகத்தில் இருந்து, பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை செல்லும்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply