அமெரிக்கப் பிரேரணையை ஆதரிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை : கிருஷ்ணா

இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணையை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி இன்னும் பரிசீலித்து வருகிறோம், இறுதி முடிவு எடுக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுபற்றி நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங்,

“அமெரிக்கப் பிரேரணை இலங்கை தமிழர்களின் நலன்களுக்கும், சமாதான நடவடிக்கைகளுக்கும் உதவும் வகையில் இருந்தால், அதை நாம் ஆதரிப்போம்” என்று தெரிவித்திருந்தார்..

இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்ததையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாக்கெடுப்பின் போது , அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு எஸ்.எம்.கிருஷ்ணா,

“அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்கலாமா, வேண்டாமா என்று பரிசீலித்து வருகிறோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்று பதில் அளித்தார்.

இந்த தகவலை வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாய் நேற்று டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அமெரிக்கப் பிரேரணை குறித்த தீர்மான நகல் இன்னமும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, டில்லி மேல் சபையில் இவ்விவகாரம் தொடர்பாக எழுத்துமூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர் பிரனீத் கவுர் பதில் அளிக்கையில்,

“இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், ஐ.நா. மனித உரிமை பேரவையில் இன்னமும் முறைப்படி விவாதத்துக்கு வரவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுமாறும், நீடித்த அமைதியும், சமாதானமும் நிலவக்கூடிய உண்மையான சமாதான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்தித்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்ட காலவரையறையுடன் விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான அமைப்பு ஒன்றை நியமிக்குமாறும் இலங்கை அரசை நாம் வற்புறுத்தி உள்ளோம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply