உலகத் தமிழர்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி : தமிழக முதல்வர் அறிக்கை

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை வரவேற்பதாகவும், இதுதொடர்பாக உலகத் தமிழர் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் ஐ.நா.வுடன் இணைந்து இந்திய அரசு பணியாற்றுமாறு வலியுறுத்தி அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கப்படும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அந்த வகையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு பணியாற்ற வலியுறுத்தி அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படவில்லை, என்றாலும், ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு செவிசாய்த்துள்ளது. அதற்காக நன்றி.

லோக்சபை மற்றும் ராஜ்யசபையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வடிவம் இந்திய அரசுக்குக் கிடைக்கவில்லை என்றும், அதேநேரம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமரின் பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து பேசினார்கள். பிரதமரின் பதில் தெளிவற்று இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நானும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டேன்.

இந்த நிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சர், எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்புகொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பிரச்சினையில் இந்தியா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாக தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குழப்பங்களுக்கு மத்தியில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு இறுதியில் வாக்களித்திருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது. தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மூலமாக தமிழர்கள் சார்பாக இந்திய அரசுக்கு நான் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவந்தேன்.

இதற்கெல்லாம் இப்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். அதற்கான முதல் நடவடிக்கைதான் இது. அதற்காக உலகத் தமிழர்கள் சார்பாக பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply