உள்நாட்டுத் தீர்மானங்களை எடுப்பவர் ஜனாதிபதியேயன்றி சர்வதேசமல்ல : ஜீ.எல்.பீரிஸ்
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது. நாட்டின் உள்நாட்டுத் தீர்மானங்களை ஜனாதிபதி மேற்கொள்வாரேயன்றி, சர்வதேச நாடுகள் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா மாநாட்டில் அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் தொடர்ச்சியாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் தற்போது பரவலாகக் காணப்படுவதாகவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், இலங்கைக்கு எதிராக பொருளதாரத் தடை விதிக்க முடியாது. எனவே இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படலாம் என எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
குறித்த பிரேரணை ஐ.நா பாதுகாப்பு சபைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்பதால் இதன் மூலம் எந்த நிலைமையிலும் இலங்கை மீது பொருளாதார தடையை ஏற்படுத்த முடியாது.
அத்துடன் ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் வெளிநாடுகளின் ஆதிக்கம் இருக்க கூடாது என்பதற்காகவே, இந்தப் பிரேரணைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் போராட்டம் நடத்தியிருந்தது.
இந்நிலையில், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக எவ்வாறான அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படாது.
எனினும் ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இதுவரையில் இலங்கைக்கு எதிராக எந்த அழுத்தமும் ஏற்படுத்தப்படவில்லை.
இலங்கையின் உள்நாட்டுத் தீர்மானங்களை இலங்கை ஜனாதிபதி தீர்மானிப்பாரே தவிர, சர்வதேச நாடுகள் அல்ல. தீர்மானங்களை எம்மில் எவரும் திணிக்கவும் முடியாது” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply