ஜெனீவா பிரேரணையை நடைமுறைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் : விமல்
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் கருத்துக் கணிப்பையோ, பொதுத் தேர்தலையோ நடத்தி இதற்கான அனுமதியைப் பெற வேண்டும். இதனைவிடுத்து அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தனது கௌரவத்தை இழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பெலவத்தையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை வெற்றியளித்ததன் பின்னர் உலகில் பல நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஆரவாரங்களில் ஈடுபடவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
எனவே அமெரிக்காவின் பிரேரணை இலங்கைக்கு சார்பானதல்ல என்பது நன்கு புலனாகிறது. அதாவது பிரபாகரனைப் பயன்படுத்தி இலங்கையில் மேற்கொள்ளவிருந்த பிரிவினைவாதம் முற்று முழுதாக முறியடிக்கப்பட்டதால் வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவையும் மேற்குலக நாடுகளையும பயன்படுத்தி மீண்டும் புலிகளுக்கு புத்துயிர் வழங்கி இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தவே இப் பிரேரணையை கொண்டு வரப்பட்டுள்ளது.
இது நிறைவேறுவதற்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியுள்ளது. இதன் மூலம் புலிகளின் முயற்சிக்கு இந்தியா உதவியுள்ளது.
லொறியின் முன்பாக “கடவுள் துணை” என்ற பெயர்ப் பலகையை மாட்டிக் கொண்டு பின்னால் அறுப்பதற்காக மாடுகளைக் கொண்டு செல்வது போன்ற செயலே இதுவாகும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை நிறைவேற்ற முடியாது. அதிகாரப் பரவலாக்கல் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றல், யுத்தக் குற்றச்சாட்டு விசாரணை போன்றவை புலிகளின் தேவைகளாகும்.
அமெரிக்காவுடன் மோத முடியாது. எனவே சொல்வதைச் செய்ய வேண்டுமென சிலர் கூறுகின்றனர். யுத்த காலத்திலும் இதேபோன்று பயங்கரவாதத்தை அழிக்க முடியாது என்று சொன்னார்கள்.
அரசை பொறியில் சிக்க வைக்க முயற்சி
பிரேரணைக்கமைய எமது இராணுவத்தினரை விசாரணை செய்வது, தண்டனை வழங்குவது, மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகளை அரசாங்கத்தை பயன்படுத்தி மேற்கொள்வதே அமெரிக்காவின் திட்டமாகும்.
இதன் மூலம் அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடுகளை உருவாக்கி மக்கள் மத்தியிலும் அரசு தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்தி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பொறிமுறையே அமெரிக்காவால் மேற்கொள்ளப்படுகிறது.
அத்தோடு இப் பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஐந்து நாடுகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு நியமிக்கப்படும். அக்குழு மனித உரிமை ஆணைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அக்கால கட்டம் இலங்கையில் பொதுத் தேர்தல்கள் நடத்த வேண்டிய கால கட்டமாகும். எனவே அனைத்தையும் அமெரிக்கா திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. அதன் முதன்மையான நோக்கம் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதேயாகும்.
மக்களின் கருத்து
எனவே இப் பிரேரணையை இலங்கைக்குள் நிறைவேற்றுவதா? இல்லையா? என்பது தொடர்பில் மக்களின் விருப்பத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக மக்கள் கருத்துக் கணிப்பையோ பொதுத் தேர்தலையோ நடத்த வேண்டும்.
அதனை விடுத்து அரசாங்கம் இதனை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தலாகாது. ஏனெனில் ராஜதந்திர வலையமைப்பில் உள்ள அதிகாரிகள் நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம்.
இந்தியாவின் கௌரவம்
தெற்காசியாவின் பெரியண்ணன் என வர்ணிக்கப்படும் இந்தியா தம்பியான இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தெற்காசியாவில் தனக்கு பலமில்லையென்பதை இந்தியா வெளிப்படுத்தியுள்ளதோடு தனது வெளிநாட்டுக் கொள்கையை காற்றில் பறக்கவிட்டுள்ளது. கௌரவத்தையும் இழந்துள்ளது.
சோனியா காந்தியின் கணவர் ராஜீவ்காந்திக்கு தண்டனை வழங்கிய இலங்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளது. இதனால் இந்தியா வெட்கப்பட வேண்டும்.
ஆதரவு வழங்கிய நாடுகளுடன் அமெரிக்காவின் பொருட்களை தவிர்ப்போம் கொக்கா கோலா பெப்சி கோலா அருந்தாவிட்டால் இறந்து போகமாட்டோம்.
அரசாங்கம் உடனடியாக எமக்கு ஆதரவு வழங்கிய நாடுகளுடன் வர்த்தக சமூக உடன்படிக்கையை உடனடியாக செய்து கொண்டு நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்றார்.
இவ் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் முன்னணியின் முக்கியஸ்தர்களான பியசிறி விஜேநாயக, மொஹமட் முஸம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply