பேச்சுவார்த்தையைத் தொடர நாம் தயார்; அரசே பின்னடிக்கிறது : அப்பாத்துரை
தேசிய பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும் விவகாரத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாராகவே இருக்கின்றது. எனினும் அரசாங்கம் இவ்விடயத்தைப் பின்னடித்துக் கொண்டிருக்கின்றது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்று சபையில் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் மேலும் ஒரு பாரதூரமான தீர்மானத்தை நாடு எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஆறு நிதிச்சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா பேரவையில் உறுதியளித்திருந்தார்.
இருப்பினும் இங்குள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் அது நடைமுறைப்படுத்தப்படமாட்டாது எனக் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில்தான் மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜெனீவா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு தவிர்க்குமேயானால் இதனை விட மிகப் பாரதூரமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படலாம். அதனையும் அரசாங்கமே எதிர்கொள்ள வேண்டிவரும்.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் தயாராகவே இருக்கின்றது. பேச்சுவார்த்தையை இடையில் நிறுத்தியதும் அதனைப் பின்னடித்து வருவதும் அரசாங்கம் தான்” என்றார்.
“அதேவேளை 7500 ரூபாவில் குடும்பம் ஒன்றினால் வாழ்க்கை நடத்த முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறியிருக்கின்றார். உண்மையில் அமைச்சர் பந்துல இந்த உலகத்தில் தான் இருக்கின்றாரா அல்லது வேறு உலகத்தில் இருக்கின்றாரா? இல்லாவிட்டால் எந்த உலகத்தில்தான் இருக்கின்றார்?
எரிபொருளின் விலைகள் அதிகரித்திருக்கின்றன. கீரை ஒரு கட்டின் விலை 50 ரூபாவாக இருக்கின்றது. மருந்துகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதற்கும் வழியில்லாதுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சீனர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது இங்கு வேலை வாய்ப்பினைப் பெற வேண்டுமானால் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதன் மூலம் தமிழரசுக் கட்சியை வீழ்ச்சியுறச் செய்வதே நோக்கமாக இருக்கின்றது” என்றும் அப்பாத்துரை மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply