இலங்கை வந்த இந்திய குழு வடக்கு செல்கிறது

இந்திய நடாளுமன்றக் குழு இன்றைய தினம் வடமாகாணத்துக்கான தமது பயணத்தை ஆரம்பிக்கிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படடுள்ள மக்களை அவர்கள் சந்திக்கவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்து. அத்துடன் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ள அவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை நேரில் சென்ற பார்வையிடவுள்ளனர்.
 
அத்துடன் அங்கு பல அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினர் நேற்றைய தினம் அரசாங்க அமைச்சர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் போது அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழு மற்றும் 13ம் திருத்தச் சட்டங்கள் தொடர்பில் விரிவாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கிடையில் நேற்றையதினம் இந்த குழு தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக கட்சிகளின் கூட்டுக் குழு என்பவற்றை சந்தித்திருந்தது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும், 13ம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன.
 
அத்துடன் மீள்குடியேற்றம், பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
எவ்வாறாயினும், இந்த குழுவின் விஜயமானது தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும் என கருத முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{ம் நேற்றைய தினம் இந்திய நாடாளுமன்றக் குழுவை சந்தித்ததாக, பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, மலையக கூட்டு குழுவின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் இந்திய நாடாளுமன்றக் குழுவுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
 
கொழும்பு தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில்,  மலையக மக்கள் முன்னணி தலைவி சாந்தினி சந்திரசேகரன், அரசியல் துறை தலைவர், வீ.இராதாகிருஷ்ணண், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.யோகராஜன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் எஸ். சதாசிவம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 
அவர்களுடன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிங்.பொன்னையா, முரளிரகுநாதன், ஊவா மாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார், மேல்மாகாண சபை உறுப்பினர் ராம், மற்றும்;, மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் லோரன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளர் திலகராஜ் மற்றும் தேசிய அமைப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதன் போது, மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் பெருந்தோட்ட துறையில் தேயிலை றப்பர் உற்பத்தி துறையில் தொழிலாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது.
 
உலக சந்தையின் தேயிலை வர்த்தகம் மற்றும் தொழில் பிணக்குகளால் இந்த வீழ்ச்சிநிலை ஏற்படடுள்ளதாக தொழிலாளர்கள் கருதுகின்றனர்.
 
எதிர்காலத்தில் இதனைக் கொண்டு தமது ஜீவியத்தை முன்னெடுக்க முடியுமா என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.
 
இந்த நிலையில், மலையக பகுதிகளில் இந்திய அரசாங்கம் முதலீடுகளை மேற்கொண்டு, வேலைவாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டது.
 
குறிப்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் மலையக மக்களின் அபிவிருத்தி மேம்படுத்தப்படவேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே அது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அதிக கவனம் மலையக மக்கள் குறித்து செலுத்தப்பட வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
 
அதிகார பரவலாக்கம் ஒன்று ஏற்படுத்தப்படும் பட்சத்தில், மலையக மக்களின் பிரச்சினைகள் தனியாக அணுகப்பட வேண்டும்
 
இலங்கையின் ஒட்டு மொத்த தமிழர் பிரச்சினையோடு மலையக மக்களின் பிரச்சினை வேறுபட்ட பரிமாணங்களை கொண்டது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
மலையக மக்களின் பல்வேறு சமூக பொருளாதார கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கும் பத்து ஆண்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் அவை நடைமுறைபடுத்தப்படாத நிலை காணப்படுவதையும் அவற்றை நடைமறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உந்துதல் அளிக்கவேண்டும் எனவும் கோரப்பட்டது.
 
இந்திய வம்சாவளியினர் என்ற அடிப்படையில், வெவ்வெறு நாடுகளில் விளையாட்டுத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகின்ற போதும், இலங்கையில் உள்ள இந்திய இந்திய வம்சாவளியினரின் விளையாட்டுத் துறை மந்தமாகவே காணப்படுகிறது.
 
உதாரணமாக மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளில், குடியேறியுள்ள இந்திய வம்சாவளியினர் விளையாட்டுத்துறையில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினர் விளையாடடுத் துறை முன்னிலைப்படுத்தப்படும் வகையில், இந்தியாவின் செயற்பாடு அமைய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply