குறுகிய காலத்தில் துரித மீள்குடியேற்றம் அரசாங்கத்துக்கு இந்தியக் குழு பாராட்டு

இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க் கட்சித் தலைவி ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு விஜயம் செய்தனர்.இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் – 412 ரக பிரபுக்கள் பயணிக்கும் ஹெலிக்கொப்டரில் இந்திய பிரதிநிதிகள் 12 பேரும் வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தை நேற்றுக் காலை 9.45 மணியளவில் சென்றடைந்தனர்.

மீள் குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வவுனியா அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் ஆகியோர் பிரதிநிதிகளை வரவேற்றனர்.

நிவாரணக் கிராமத்தில் 1800 குடும்பங்களைச் சேர்ந்த 6003 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். ஒரு குறுகிய காலத்துள் பெருந்தொகையான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டதாகவும் அவர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக எஞ்சியுள்ள மக்களையும் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் என அமைச்சர் குணரட்ண வீரக்கோன் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் மற்றும் ஏனைய இந்திய எம்.பிக்கள் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்களை சந்தித்து உரையாடினர்.

நிவாரணக் கிராமங்களிலிருந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய பாராளுமன்ற குழுவினர் அரசுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

நிவாரணக் கிராமத்திலிருந்து புறப்பட்ட இந்திய பிரதிநிதிகள் குழுவினரை புளியங்குளம் சென்று அங்கு இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடினர்.

இவர்களுடன் இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா, யாழ். நகரிலுள்ள துணைத் தூதர் மகாலிங்கம் ஆகியோரும் சென்றிருந்தனர்.

புளியங்குளம் சென்ற இந்திய பிரதிநிதிகள் குழுவினரை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர்.

புளியங்குளம் வடக்கில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்கள் வீட்டினுள் தாம் செய்கை பண்ணிய நெல் மற்றும் உளுந்து வகைகளை மூடையிட்டு குவித்து வைத்திருந்ததையும் இந்திய பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்டனர்.

யுத்தம் முடிவடைந்து ஒரு குறுகிய காலத்திலுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொண்டுள்ளமை தொடர்பாக இந்திய பிரதிநிதிகள் குழுவினர் தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு பகுதிக்கு விஜயம் செய்த இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்கு சுமார் 89 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களையும் கையளித்தனர்.

முல்லைத்தீவு அரச அதிபர் வேதநாயகன் இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கான பகல் போசன விருந்துபசாரங்களை அரச அதிபர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார். நேற்று மாலை முள்ளியவளை பாடசாலையில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் சந்திப்பின் போது மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் இந்திய பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து குழுவினர் யாழ். நகர் புறப்பட்டனர். இந்திய பிரதிநிதிகள் குழுவினர் ஹெலிக்கொப்டர் மூலம் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தை சென்றடைந்தனர்.

அங்கிருந்து யாழ். நகரிலுள்ள ஹோட்டேல் டில்கோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ். நகரிலுள்ள இந்திய துணைத் தூதர் திரு. மகாலிங்கத்தினால் ஹோட்டேல் டில்கோவில் இரவு போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply