அனைத்துக் கட்சிகளுடன் பேசியமை பயனுள்ள விடயம் : நாச்சியப்பன்
நாம் இலங்கையில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து கொண்டமை பயனுள்ள விடயமாக இருந்தது என இந்திய பாராளுமன்ற குழுவில் பங்கேற்றுள்ள சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட நிலையில் ஊடகவியலாளர்கள் அவரிடம் இலங்கை விஜயம் தொடர்பிலும் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை அரசில் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பிலும் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவித்த அவர் பல கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் நேரடியாக சந்தித்து கதைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. எனவே ஒவ்வொருவரும் என்ன சிந்தனையுடன் இருக்கின்றார்கள் எந்த அளவில் திட்டங்களை செயற்படுத்துகின்றார்கள் என்பது தொடர்பில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை எந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பது பற்றி பல்வேறு கட்சிகளுடன் பேசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
சம்பந்தன் ஐயாவுடன் பேசுவதற்கும் அரசாங்கத்தின் நிலை தொடர்பில் பேசுவதற்கும் சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன் நேற்று முன்தினம் இரவு அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாகவும் இந்தியாவை பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்கும் அவர்களைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக இருந்துள்ளது.
இந்த விஜயத்தின்போது நாம் எது எதைப் பார்க்க வேண்டும் எது எது வேண்டும் என இந்திய தூதுவராலயத்தின் மூலம் கோரினோமோ யார் யாரை சந்திக்க வேண்டும் என வேண்டினோமோ அவை அனைத்தும் எமது பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply