தமிழர் சிந்திய குருதி வீண் போகாது; தமிழீழம் ஒரு நாள் மலரும் : கருணாநிதி

இன்றில்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,”கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதேபோன்ற ஒரு நடைமுறையை தான் தனித் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை பின்பற்ற வேண்டுமென்று நாம் கோருகிறோம். அதற்கு தான் மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இந்த வாக்கெடுப்புப் பற்றி, நான் இப்போதல்ல, 14௰௧987இல் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே கூறியிருந்தேன்.

அன்று ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த வாரமே, கொழும்பில் ராஜீவ் காந்திக்கு பக்கத்திலே அமர்ந்து ஒப்பந்தத்திலே கையெழுத்துப் போட்ட அன்றைய ஜனாதிபதி ஜயவர்த்தனா கிழக்கு மாகாண மக்கள் விரும்பினால் இணைந்திருக்கலாம் இல்லாவிட்டால் தனித்திருக்கலாம் என்ற கருத்தமைந்த ஷரத்தை எழுதி கையெழுத்துப் போட்டார். அதே ஜயவர்த்தனா, அப்படி ஒரு பொதுத் தேர்தல் வந்த போது, வாக்கெடுப்பு நடத்தினால், நான் கிழக்கு மாகாணத்திற்குச் செல்வேன், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்தோடு இணைகின்ற அந்தக் கருத்திற்கு எதிராகப் பேசுவேன் என்று சொன்னார்.

எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அப்போதே அதற்கு மாறாக இலங்கை அதிபர் பேசினார். 27௮௧983இல் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் விடுதலை பெற்ற தனித் தமிழ் ஈழம் தான் இதற்கு நிரந்தர பரிகாரம் என்று இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

தனித் தமிழ் ஈழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையும், தமிழ் நாடும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன என்ற உண்மையினை பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இலங்கை, கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு வாழ்ந்த மக்களின் வழித்தோன்றல்களே ஈழத் தமிழர்கள் ஆவர்.

தனித் தமிழ் ஈழம் எனும் விடுதலை கீதம் தரணியெங்கும் வாழும் தமிழர்களின் செவிகளிலே இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய இரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லா விட்டால் நாளை மறுநாள் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். ஈழத் தமிழினத்தின் இணையற்ற அடையாளம் குன்றின் மேலிட்ட விளக்காக குவலயத்திலே ஒளி வீசும்” எனத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply