இந்திய நாடாளுமன்ற குழுவினர் கிழக்கு சென்றனர்
இலங்கையில் தற்போது தங்கியுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் நேற்று வெள்ளிக் கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இவர்களது பயணம், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றுக்காக இரண்டு மணிநேரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்திய உதவியுடன் நவீன மயப்படுத்தப்பட்ட வந்தாறுமுலை தொழிற்பயிற்சி வளாகத்திற்குரிய உதவிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே மட்டக்களப்பிற்கு இவர்கள் சென்றிருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கும் இந்திய எதிர்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைக்கு போக்குவரத்து, கல்வி ,தொழிற்பயிற்சி உட்பட 52 திட்டங்களுக்கு இந்தியா உதவிவருவதாக கூறினார்
இந்திய குழுவினரை வரவேற்று உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
‘சம்பூர் மக்களை சந்திக்கவில்லை’
இதேவேளை கிழக்கு மாகாணத்திற்கான இந்திய குழுவினரின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள சம்பூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன், இந்திய உதவியுடனான அனல் மின்நிலையம் காரணமாகவே சொந்த இடங்களில் தாம் மீளக்குடியேற முடியாத நிலையில் தொடர்ந்தும் அகதி முகாம்களில் இருப்பதாகக் கூறினார்.
தங்களை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் வந்து பார்வையிடுவார்கள் என தாம் எதிர்பார்த்த போதிலும் அது ஏமாற்றமாக அமைந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண வருகையின் போது மக்களை சந்திக்காமை குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பனிடம் கேட்டபோது, கிழக்கு மாகாணத்தில் பிரச்சினைகள் இருப்பது பற்றி அதிகாரிகள் யாரும் குறிப்பிடவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
சம்பூர் மக்களின் பிரச்சனை குறித்து தான் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றும் அவர் பதிலளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply