யாழ். குடாநாடு முழுவதும் தற்போது படையினர் வசம்
யாழ். சுண்டிக்குளம் முழுவதும் நேற்று மாலையளவில் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ். குடாநாடு முழுவதும் தற்போது படையினர் வசமாகியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
சுண்டிக்குளத்துக்குள் நேற்றுக் காலை பிரிவேசித்த படையினர் மாலை வரை தொடர்ந்து புலிகளுடன் மேற்கொண்ட மோதலையடுத்தே அப்பகுதி முழுவதையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக பிரிகேடியர் கூறினார். ஆனையிறவுக்கு கிழக்காக அமைந்துள்ள சுண்டிக்குளம் பிரதேசத்தை கடற் புலிகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
சுண்டிக்குளம் முழுவதையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந் துள்ள படையினர் புலிகளால் கைவிடப் பட்டுச் சென்ற நூறுக்கும் அதிகமான கடற் புலிகளின் படகுகள், 400க்கும் மேற்பட்ட அமுக்க வெடிகள், 40 இற்கும் மேற்பட்ட யுத்த தாங்கிகள், இரண்டு லொறிகள், ஐந்து ட்ரக்டர்கள், ஒரு கனரக வாகனம், 1000 கிலோ வெக்ற் உடைகள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல வெடிபொருட்களை அங்கிருந்து மீட்டுள்ளனர். புலிகளிடமிருந்து இதுவரை கைப்பற்றப்பட்டு வந்த இடங்களிலிருந்து இத்தனை கனரக வாகனங்களையும் படகுகளையும் கைப்பற்றியுள்ளமை இதுவே முதல் தடவையெனவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
யாழ். குடாநாட்டில் சுண்டிக்குளம் பிரதேசம் மாத்திரமே இறுதியாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இப்பகுதியையும் இராணுவத்தினர் நேற்று மாலை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். யாழ். குடா நாடு முழுவதும் தற்போது படையினர் வசமாகியுள்ளது. இது இராணுவத்தினர் முன்னெடுத்து வந்த அயராத முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகுமென்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
55 ஆம் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினரே சுண்டிக்குளம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். நேற்றுக்காலை சுண்டிக்குளம் பகுதிக்குள் பிரிவேசித்த படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மாலை வரை கடும் மோதல் இடம்பெற்றது.
இம்மோதல்களின் போது பெரும் எண்ணிக்கையான புலிகள் உயிரிழந்திருப்பது அவர்களுடைய தொலைத் தொடர்புகளை இடைமறித்து செவி மடுத்தபோது தெரிய வந்திருப்பதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார். படையினர் தொடர்ந்து மேற்கொண்ட கடும் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலி உறுப்பினர்கள் காயமடைந்த புலிகளையும் தூக்கிக் கொண்டு முல்லைத்தீவு பக்கமாக தப்பியோடியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply