பள்ளிவாசலை அகற்ற பிரதமர் உத்தரவிடவில்லை! பௌசி மறுப்பு
இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இடிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் பிரதமர் டிஎம் ஜயரத்ன அறிவித்துள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில், குறித்த பகுதியிலிருந்து பள்ளிவாசலை அப்புறப்படுத்தி, அதனை வேறொரு பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஜயரத்ன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக முத்திரையுடன் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கம்பளையில் நடந்த சிறப்பு கூட்டமொன்றின் பின்னர் பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா மற்றும் துணை அமைச்சர்களான அப்துல்காதர், ஹிஸ்புல்லா ஆகியோரும் இஸ்லாமிய மதத்தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவது குறித்த முடிவு எடுத்ததாகக் கூறப்படும் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என்றும் ஆகவே பிரதமர் அலுவலகத்தில் இருந்து அப்படியான அறிக்கை வந்திருக்க முடியாது என்றும் அமைச்சர் ஏ. எச். எம். பௌசி பீபீசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் அலுவலகத்திலிருந்து இப்படியான அறிக்கையொன்று வெளியாகியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் பெளசி தமிழோசையிடம் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் தானோ மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவோ கலந்துகொள்ளவும் இல்லை என்றும் அமைச்சர் பௌசி சுட்டிக்காட்டினார்.
பல பரம்பரைகளாக தம்புள்ளை நகரில் முஸ்லிம் மக்கள் சென்று வழிபட்டுவரும் பள்ளிவாசலை அகற்றுமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தபோது, முஸ்லிம் நாடுகளும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களும் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை ஆதரித்திருந்த நிலையில், தம்புள்ளை நகரில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் ஏதாவது சக்திகள் இருக்கலாம் என்று கருதுவதாகவும் அமைச்சர் பௌசி மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக பீபீசி தமிழோசை செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply