மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகாவிட்டால் தமிழீழம் உருவாகியிருக்கும்: கோதபாய

2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு, தமிழீழம் உருவாகியிருக்கும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். 
 
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பல்வேறு சவால்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்டு நாட்டை ஒரு பாரிய யுத்த வெற்றிக்குக் கொண்டுசென்றிருப்பதாக தேசிய தொலைக்காட்சியில் நேற்று நடந்த நேர்காணலில் அவர் கூறினார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் மூலமே பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கை உதவியைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

இராணுவத்தினர் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம், உலகத்தையே கவர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உலகத்திலேயே சிறந்த இராணுவத் தளபதியை இலங்கை கொண்டுள்ளது என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன் பாராட்டியதாகவும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகளை எதிர்கொண்டவிதம் குறித்து இலங்கை கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளருடன் அரை மணிநேரம் கலந்துரையாடுவதற்கு இஸ்ரேலிய கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்குக் குறைந்தளவு பாதிப்பை மாத்திரம் ஏற்படுத்தி, இலக்கைத் துல்லியமாகத் தாக்குவதில் தலைசிறந்த இலங்கை விமானப்படை, உலகிலேயே சிறந்த விமானிகளைக் கொண்ட படை” என்றார் அவர்.

முல்லைத்தீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் போராடிவரும் இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை விரைவில் கைதுசெய்வார்கள் என உறுதிபடத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டாலும், நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல முடியாது எனக் கூறினார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது சைனட் வில்லையை உட்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த பிரபாகரன், பின்னர் அங்கிருந்து தப்பி முல்லைத்தீவுக் காட்டுக்குச் சென்று மனதை மாற்றிக் கொண்டதாகக் கூறினார். தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சைனட்டை உற்கொள்வதா இல்லையா என்ற மனோ நிலையில் பிரபாகரன் இருப்பதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏன் கருணாவைப் பயன்படுத்தவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றமையாலேயே அரசாங்கம் யுத்த வெற்றிகளைப் பெற்றதாக கூறப்படுன்றமை குறித்துக் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,
கருணாவைப் பிரித்ததன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றால் ஏன் அன்றைய அரசாங்கம் இந்தப் புத்திசாதுரியமான நடவடிக்கையைச் செய்யவில்லை எனக் கேள்வியெழுப்பினார்.

கருணா குழுவின் உறுப்பினர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் எம்மால் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. அதனை ஏன் அவர்கள் செய்யவில்லை” என்றார் அவர்.

இதேவேளை, அரசாங்கத்தின் எந்தத் தேவைக்கும் எந்தவொரு ஊடகவியலாளரும் பயன்படுத்தப்படவில்லையெனக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, சில இலத்திரனியல் ஊடகங்கள் மோதல் சம்பவங்கள் தொடர்பான படங்களை வெளியிடாமல் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மக்களைக் குழப்பும் நோக்கில் செயற்பட்டன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply