வட இலங்கையில் கொத்தணிக் குண்டுகள் ?
இலங்கையின் வடபகுதியில் கொத்தணிக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐநாவின் நிபுணர் ஒருவர் வெடிக்காத கொத்தணிக் குண்டுகள் இலங்கையில் வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்ததாக அது கூறியுள்ளது.
கடந்த மாதத்தில் ஒரு குழந்தை வெடிபொருள் வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகில் இந்த அபாயகரமான ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
2009 இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை இது காண்பிக்கிறது. ஆனால், சர்வதேச உடன்படிக்கைகளின்படி தடை செய்யப்பட்ட இப்படியான ஆயுதத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை தான் முன்னர் மறுத்தது போலவே இப்போதும் இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக வெடிக்காத கொத்தணிக்குண்டுகளை தாம் பார்த்ததாக உறுதி செய்யும் ஐநாவின் மின்னஞ்சல் ஒன்றை தாம் பார்த்ததாக அமெரிக்காவின் அசோஸியேட்டட் பிரஸ் செய்தி சேவை கூறியுள்ளது.
இறுதிக்கட்டப் போர் நடந்த கிளிநொச்சிக்கு அருகே உடைந்த இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் வெடிபொருள் ஒன்று வெடித்து கொல்லப்பட்டுஇ அவனது சகோதரி படுகாயமடைந்த இடத்துக்கு அருகே இந்த கொத்தணிக்குண்டின் துணை வெடிபொருள் காணப்பட்டதாக யூ.என்.டி.பியின் நிலக்கண்ணி நிபுணரான அலன் பொஸ்டன் கூறியதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.
கொத்தணிக் குண்டுகள் என்ற வகைக்குள் வரும் எந்தவொரு ஆயுதங்களையும் இலங்கை அரசாங்க ஆயுதப்படைகள் பயன்படுத்தவில்லை என்று இராணுவப் பேச்சாளரான ருவான் வணிகசூரிய திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
விடுதலைப்புலிகள் அதனைப் பயன்படுத்தியிருப்பார்களா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர்இ அப்படியான குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும், ஆனால் தான் அதனை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறினார்.
இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று ஐநாவிடம் இராணுவம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இறுதிக்கட்ட போரின் போது அரசாங்க படைகள் வீசிய சில குண்டுகளில் இருந்த சிறிய கொத்துக்கொத்தான குண்டுகள், பல இடங்களில் சிதறிவிழுந்து வெடித்ததாகவும், அல்லது சில ஆண்டுகள் தாழ்த்தி அவை வெடித்ததாகவும்இ பொதுமக்கள், போர் விசாரணையின் போதும், வேறு பல சந்தர்ப்பங்களிலும் கூறியிருக்கிறார்கள்.
கொத்தணிக் குண்டுகளை தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்று 2010 இல் அமலுக்கு வந்தது. ஆனால் இலங்கை, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்படவேறு சில நாடுகள் அதில் கைச்சாத்திடவில்லை.
கொத்தணிக்குண்டுகளை சட்டபூர்வமான ஆயுதங்கள் என்று கூறி அமெரிக்கா அவற்றை 1960 இல் வியட்நாமிய போரில் பயன்படுத்தியது. வடக்கு இலங்கையின் வேறு ஒரு இடத்தில் இரு சிறுவர்கள்இ நிலக்கண்டி ஒன்றில் அகப்பட்டு உயிரிழந்த செய்தி வந்த சூழ்நிலையில் இந்த தகவலும் வந்திருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply