தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது – முஸ்லிம் காங்கிரஸ்
தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் முடிவுக்கு கட்சியின் உயர் பீடமும் இன்று அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டார்.
ஒரு பகுதியில் பலவீனமான நிலையில் இருக்கும் ஒரு மக்கள் குழுவை பாதுகாக்க ஒரு அரசாங்கத்தால் முடியாவிட்டால், அதனை பலமான அரசாங்கமாகக் கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆனால் அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அதேவேளை தமது கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் குறிப்பாக நிசாம் காரியப்பர் போன்றவர்கள் கட்சியின் முழுமையான இணக்கப்பாடு இல்லாமல் தான்தோன்றித்தனமாக இது போன்ற விடயங்களில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் தமது கட்சிக் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸை அரசுக்கு வெளியே தள்ளிவிட வேண்டும் என்று தருணம் பார்த்திருக்கும் சக்திகளுக்கு இவை இடமளித்துவிடும் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply