இன்று சர்வதேச தொழிலாளர் தினம்!

இன்று சர்வதேச மே தினம். Day of the International Solidarity of Workers. அதாவது ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது.

இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலக கைத்தொழில் புரட்சியின் பயனாக ஆலைகளின் பெருக்கம், இயந்திரமயமாக்கம், பேரளவு உற்பத்தி ஆகிய காரணிகள் தொழிலாளரை ஒரு வர்க்கமாக ஒன்றுபட வைத்தது. ஒருபுறம் முதலாளிகள் உற்பத்தி முயற்சியில் இலாபம் பெறுகின்றனர்.

தொழிலாளரிடமிருந்து ஊழியத்தைப் பெறுகின்ற அளவு அவர்களுக்கான உரிமைகள், ஊதியம், சலுகைகள் என்பவற்றை வழங்குவதில் உற்பத்தியாளர் ஆர்வம் காட்டவில்லை. கால்வயிற்றுக் கஞ்சிக்காக தம் உழைப்பை நல்கும் தொழிலாளர் வேறு வழியின்றி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டனர்.

இதனால் தொழிலாளர் வாழ்க்கையை சிறுமையும், வறுமையும் ஆட்கொண்டன. அதே நேரம் தொழில் உரிமையாளர்களால் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்யவேண்டுமென தொழிலாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட பின்னணியில் கட்டாய வேலைநேரத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளில் குரல்களும் ஆங்காங்கே எழ ஆரம்பித்தன. குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய ஆவண இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. இதில் 10 மணி நேர வேலைக் கோரிக்கை முதன்மை பெற்றிருந்தது.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் அடிப்படையில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியது.

அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழிலாளர்கள் தமது கடமையைச் செய்து உரிமையை அனுபவிப்பதற்கு தொழிலாளர் தினம் முக்கியத்துவம் பெறுகிறது.

தொழிலாளர்கள் அனைவருக்கும் எமது தொழிலாளர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply