இலங்கை தமிழ் கட்சிகள் இணைந்து லண்டனில் புதிய அமைப்பு உதயம்
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் தர இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் பிரிட்டிஷ் கிளைகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் காங்கிரஸ் என்ற புதிய அமைப்பை லண்டனில் உருவாக்கியிருக்கின்றன.
இந்த அமைப்பினர் சமீபத்தில், இலங்கைப் பிரச்சினை குறித்து தங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்து, ஈஸ்ட் ஹாம் உடன்பாடு என்ற பெயரில் புதிய நிலைப்பாட்டை அறிவித்திருந்தன. இந்த உடன்பாடு பற்றிய ஒரு கூட்டம் திங்களன்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தின் நோக்கங்கள் மற்றும் நடந்த விடயங்கள் பற்றி தமிழ் தேசிய காங்கிரசின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பிரிட்டிஷ் கிளை செயலருமான ஷண்முகராஜா அரவிந்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை இனப்பிரச்சினைக்கு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் வன்முறையின்றி அமைதித்தீர்வு ஒன்று, இந்திய இலங்கை ஒப்பந்த்த்தின் அடிப்படையில் காணப்படவேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் நோக்கம் என்றார்.
இலங்கையில் இருக்கும் இந்தக் கட்சிகளின் தலைமைகளுடைய ஆதரவும் இந்த புதிய அமைப்புக்கு இருப்பதாக அவர் கூறினார்.
இலங்கையைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈழ மக்கள் ஜனநாயக்க் கட்சி, ஈரொஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply