பிரிட்டனின் குற்றச்சாட்டுக்களிற்கு அரசு அதிருப்தி
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளதற்கு இலங்கை அரசு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீரல் தொடர்பான விஷயங்கள் குறித்து, அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதற்கு பிரிட்டிஷ் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அமைப்புகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன என்றும், அவ்வமைப்புகள் போதிய அளவில் தங்களது செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.
‘ஆணைக் குழுவின் அறிக்கையை அமல்படுத்தவும்’
இலங்கையின் அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தவும், போர் காலத்தில் இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்தவும் அரசு முன்வர வேண்டும் எனவும் பிரிட்டன் கோரியிருந்தது.
ஆனால் அரசு தாங்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதன் அடிப்படையில் பிரிட்டன் கூறுகிறது என்று இலங்கை அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும், அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரிட்டன் இப்படியான கருத்துக்களை எப்படி கூறலாம் என்று இலங்கை அரசு வாதிடுகிறது.
இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில் நாட்டை கட்டி எழுப்புவது, போரினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவது, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகத்தில் இணைத்துக் கொள்வது ஆகிய விஷயங்களில் அரசு சில முன்னெடுப்புகளை செய்திருந்தாலும், மனித உரிமைகள் தொடர்பான அம்சங்கள் இன்னமும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது என்று பிரிட்டன் கூறுகிறது.
இலங்கையில் நீதித்துறை நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தாலும், அதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும், குற்றவியல் வழக்களை முறையாக கையாளும் நீதிபரிபாலன வழிமுறைகள் ஆகியவற்றில் தொடர்ந்து பல சவால்கள் இருக்கவே செய்கின்றன எனவும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆட்கள் கடத்தப்படுவதும்இ,காணாமல் போவதும் தொடர்கதையாகவே உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆனைக்குழு கூட, காணாமால் போனவர்கள் தொடர்பிலான வழக்குகளை விசாரிப்பதிலும், தவறிழைத்தவர்களை தண்டிப்பதிலும் முன்னேற்றங்கள் இல்லாது குறித்து தமது கவலையை வெளியிட்டிருந்ததையும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளிலிருந்து ஓரளவுக்கு இராணுவத்தின் பிரசன்னம் குறைத்துக் கொள்ளப்பட்டிருந்தாலும், தமது தூதரக அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு செல்லும் போது, இன்னமும் பெருமளவில் இராணுவப் பிரசன்னம் இருப்பதை கண்டுள்ளனர் என்றும் பிரிட்டன் கூறியுள்ளது.
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அதிகாரம் இராணுவத்திடமிருந்து சிவில் நிர்வாகத்திடம் மாற்றப்பட வேண்டும் எனவும் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஆனால் இலங்கை அரசின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சரோ, கடந்த திங்கட்கிழமை தன்னை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், தமது நாட்டின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாராட்டியதாகவும் கூறுகிறார்.
இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே ஒரு அனுமானத்துக்கு வந்து பிரிட்டன் இப்படியான விமர்சனங்களை வைப்பது சரியல்ல எனவும் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply