அமெரிக்கர்கள் ஆரம்பித்ததை அவர்கள் தான் முடித்து வைக்க வேண்டும் – ஒபாமா

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கர்கள் ‘ஆரம்பித்த காரியத்தை நிறைவேற்றிவிட்டு, போரை பொறுப்போடு முடித்துவைக்க வேண்டுமென்று’ அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைத்தளமொன்றிலிருந்து நேரடியாக உரையாற்றியபோதே ஒபாமா அமெரிக்க மக்களுக்கு இந்த உறுதியை அளித்துள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், பகிரங்கமாக அறிவிக்கப்படாத விஜயமொன்றை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் சென்றுள்ள ஒபாமா, அடுத்து நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டை முன்னிட்டு அதிபர் ஹமீட் கர்சாயுடன் இணைந்து எதிர்கால அமெரிக்க-ஆப்கன் உறவுகள் குறித்த உடன்படிக்கையிலும் கையெழுத்திடுகிறார்.

ஒபாமா உரையாற்றி சில மணிநேரம் கடந்த நிலையில், காபூலில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகரின் கிழக்குப் பகுதியில் வெளிநாட்டவர்கள் தங்கும் மாளிகையொன்றை இலக்குவைத்து இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 4 பேர் அருகிலுள்ள பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள். 17 பேர் சம்பவத்தில் காயமடைந்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்கான பொறுப்பை தாலிபன் இயக்கத்தினர் ஏற்றுள்ளனர்.

ஆயுததாரிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த இன்னொரு தாக்குதலை தாங்கள் முறியடித்துவிட்டதாக நேட்டோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய அதிபர் ஒபாமா, அதிபர் கர்சாயுடன் கைச்சாத்திடும் உடன்படிக்கையை ‘வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வு’ என்று வர்ணித்தார்.

ஆப்கன் போரை முடித்துவைப்பதற்கான உத்தியொன்றை நோக்கி தான் செல்வதாக அமெரிக்க வாக்காளர்களுக்கு காட்டவும், அவ்வாறே தாலிபன்களின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் ஆப்கானியர்களுக்கு உறுதியொன்றை வழங்கவும் ஒபாமா இந்தக் கருத்துக்களை கூறியுள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள 88,000 அமெரிக்கத் துருப்பினரில் 23,000 பேர் வரையில் விரைவில் அங்கிருந்து வெளியேற இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளும் 2014ம் ஆண்டின் இறுதிக்குள் வெளியேற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply