தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை டெசோ உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்
டெசோ அமைப்பின் குறிக்கோளை நிறைவேற்றும் நோக்குடன் இலங்கை இனச்சிக்கலுக்கு தனி தமிழீழம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற உண்மை நிலையை வட இந்திய தலைவர்களுக்கும், உலக நாடுகளின் தலைவர்களுக்கும் உணர்த்தவும் அவர்களின் ஆதரவை திரட்டவும் தேவையான நடவடிக்கைகளையும் உடனே தொடங்கும்படி தி.மு.க. தலைவர் கலைஞரைகேட்டுக் கொள்வதாக டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் ´தமிழீழம்´ அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக தமிழீழம் ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ) தொடங்கப்பட்டிருப்பதாகவும் அதன் தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்திருக்கிறார்.
டெசோ அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்துவிட்ட போதிலும் தமிழீழம் அமைப்பதற்கான அதன் செயல் திட்டம் என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. மாறாக தனித் தமிழீழம் அமைக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த முயற்சி மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்று கலைஞர் கூறியிருக்கிறார்.
இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. கலைஞர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதை விட்டு விட்டு தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி காங்கிரஸ் தலைமைக்கு நிர்பந்திக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டம் வருகிற 22-ந்திகதி டெல்லியில் நடைபெற உள்ளது. அப்போது தனி தமிழீழம் அமைப்பதற்காக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை கலைஞரே முன் மொழிந்து நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதே போன்ற தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளை கலைஞர் உடனடியாக தொடங்க வேண்டும்.
டெசோ அமைப்பின் குறிக்கோளை நிறைவேற்றும் நோக்குடன் இலங்கை இனச்சிக்கலுக்கு தனி தமிழீழம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற உண்மை நிலையை வட இந்திய தலைவர்களுக்கும், உலக நாடுகளின் தலைவர்களுக்கும் உணர்த்தவும் அவர்களின் ஆதரவை திரட்டவும் தேவையான நடவடிக்கைகளையும் உடனே தொடங்கும்படி தி.மு.க. தலைவர் கலைஞரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply