தமிழர்களின் நியாயமான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – சுஷ்மா சுவராஜ்

ஐக்கிய இலங்கையில் கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை சிறுபான்மை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களிடம் வலியுறுத்தினார்கள் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் கடந்த ஏப்ரல் 16-ந்திகதி முதல் 5 நாட்கள் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

போருக்குப்பின் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்த அவர்கள், தமிழர் கட்சி பிரதிநிதிகள், இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

இவ் விஜயம் தொடர்பில் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 13 எம்.பி.க்களும் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்கள்.

45 நிமிட நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பின்போது இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எம்.பி.க்கள் குழுவினர் பிரதமரிடம் எடுத்துக் கூறினார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங், ஒவ்வொரு எம்.பி.யிடமும் தனித்தனியே கருத்துகளை கேட்டறிந்தார். தங்கள் இலங்கை பயணம் குறித்த தங்கள் முடிவுகளை விளக்கி அறிக்கை ஒன்றை குழுவினர் தயாரித்து இருந்தனர். அந்த அறிக்கையை அவர்கள் பிரதமரிடம் வழங்கினார்கள்.

இவ் சந்தர்ப்பத்திலேயே சுஷ்மா சுவராஜ் மன்மோகன்சிங்கிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, பாராளுமன்ற தேர்வு குழு அமைத்து, தமிழர்களின் நியாயமான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யும் 13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் சுஷ்மா சுவராஜ் பிரதமரிடம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply