தலைவர் சிறி சபாரத்தினம் நினைவு தினம்- சிறி டெலோ ஏற்பாட்டில்
தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவர் அமரர் சிறி சபாரத்தினம் மற்றும் அவரோடு உயிர் நீத்த 300 போராளிகளினதும் நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மே மாதம் 5ம் திகதி அனுஷ்டிக்கப் படுகிறது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சரியான வழியிலே முறையாக முன்னெடுத்தவர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம். மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, பாரிய தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்கள் டெலோ அமைப்பினர்.
திம்பு பேச்சுவார்த்தையின் பின் 1986ல் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை வென்றெடுக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை, தலைவர் சிறி சபாரத்தினம் தலைமையில் டெலோ அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர். அவரே களத்தில் நேரடி வழி நடத்தல்களை மேற் கொண்டிருந்தார். தாமே தமிழ் மக்களின் தலைவர்கள் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் தலையில் இடி இறங்கியது. எப்படியாவது இதைத் தடுக்க முடிவெடுத்தனர். சரியான சந்தர்ப்பத்தில், பேச்சுவார்த்தை என்ற கபட நாடகத்தினை அரங்கேற்றினர். நம்பிய தலைவர் சிறி சபாரத்தினமும் 300 சக தோழர்களும் படுகொலை செய்யப்பட்டனர். தமிழினம் மட்டுமல்லாது, மற்றைய அமைப்பினரும், இந்திய தமிழ் மக்களும் ஆறாத் துயரில் வீழ்ந்தனர். தலை சிறந்த, ஈடு இணயற்ற தலைவரும், அவரது இயக்கமும், போராளிகளும், தமிழ் மக்களின் போராட்டமும் சேர்த்து அழிக்கப்பட்டன.
இது எவ்வளவு தவறான செயல் என்பதைப் பின்னர் நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகள் தெள்ளத் தெழிவாக விளக்கின. மறைந்த எமது அமைப்பின் அனைத்துப் போரளிகளையும் நினைவு கூரும் வண்ணம் மே 6ம் திகதி வவுனியாவில், சிறி டெலோ அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்சிகள் ஒழுங்கு செய்ய்யப் பட்டிருக்கின்றன. வன்னிப் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கால் பந்தாட்டப் போட்டியும் இதில் குறிப்பிடத் தக்கது.
தமிழினம் தவிர்க்க முடியாத அரசியல் நிர்ப்பந்தத்தினால் ஆயுதப் போராட்டத்தை தழுவியது. அதில் பலர் உயிர் நீத்தனர். அவர்களின் குருதியில் கால் நனைத்து அரசியல் சிம்மாசனங்களில் வீற்றிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் தமது தலைவர்களையும், சக தோழர்களையும் மறந்து விட்ட நிலையில், சிறி டெலோ இன்றும் நன்றியுணர்வோடு இந்த போராளிகளை நினைவு கூருவது மற்றோருக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். இந்த வகையிலே அமிர்தலிங்கம் ஐயா போன்றோரும் அவர் சார்ந்த கட்சியினரால் நினைவு கூரப்படுவார்களா? தமிழினத்திற்காக இத்தலைவர்க்ளும் சக போராளிகளும் செய்த அளப்பரிய தியாகங்களை நாம் மறக்கக் கூடாது என்பதை சிறி டெலோ அமைப்பு வலியுறுத்தி நிற்கிறது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply