ஐநாவில் இருந்து இடமாற்றும் அரசின் முயற்சிக்கு தமரா எதிர்ப்பு

அண்மையில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் சார்பில் கருத்துக்களை முன்வைத்த ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம், தன்னை ஐநாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்திகளை உண்மை என்று உறுதி செய்துள்ளார்.

தன்னை வேறு இடத்துக்கு மாற்றுவதை, இலங்கைக்கு எதிரான சக்திகள், தமிழர் ஒருவருக்கு எதிரான பழிவாங்கலாக தவறாக அர்த்தப்படுத்தி கூற முற்படலாம் என்றும் அவர் வெளியுறவு அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் எச்சரித்திருக்கிறார்.

தன்னை பிரசிலுக்கு அல்லது கியூபாவுக்கு மாற்றலாகிச் செல்லுமாறு கேட்கப்பட்டதாகக் கூறும் தமராஇ அது தற்போதைய தருணத்துக்கு உகந்ததல்ல என்பதையும், அது ஏன் தவறு என்பதையும் வெளியுறவு அமைச்சுக்கு தான் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார்.
தமரா குணநாயகம் செவ்வி

தன்னை ஐநா மனித உரிமகள் அலுவலக நிரந்தரத் தூதுவர் பதவியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தவறு என்கிறார் இலங்கையின் இராஜதந்திரியான தமரா குணநாயகம்.

” நான் தவறான வழியில் சென்றதற்கான ஒரு தண்டனையாக ஜெனிவாவில் உள்ள எமது நண்பர்களாலும், இலங்கையில் உள்ள மக்களாலும் பார்க்கப்படலாம் என்ற காரணத்தால் நான் எனது இடமாற்றத்தை ஒரு தவறான முடிவு என்று கருதுகிறேன்.

ஏனெனில் நான் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலில் கொள்கைகாக செயற்பட்டேன். எனது சொந்த நலனுக்காக நான் எதுவும் செய்யவில்லை.

ஆகவே நான் இடமாற்றம் செய்யப்பட்டால், அது இந்த விடயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்தவர்களுக்கு ஒரு வெற்றியாகப் பார்க்கப்படும்.

எமது மக்களின், நாட்டின் வெற்றிக்காக இறுதி வரை போராடியவள் என்ற படியால் என்னை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பலர் விரும்பினார்கள். ஒரு குதிரையை போட்டியின் நடுவில் மாற்றக்கூடாது. நான் மாற்றப்பட்டால், இங்கு மூன்று வருடங்களில் 4 தூதுவர்கள் இலங்கையால் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் 3 வருடம் என்பது ஏனைய நாடுகளைப் பொறுத்தவரை ஒரு தூதுவருக்கான குறைந்தபட்ச காலமாகும்.” என்று தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

இப்படியான இடமாற்றம் தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பாக அமையும் என்றும் தன்னை தமிழராகப் பார்த்து விமர்சிப்பவர்களுக்கு இது சாட்டாக அமைந்து, தான் தமிழர் என்பதற்காகக் பழிவாங்கப்படுகிறேன் என்ற அவர்களது குற்றச்சாட்டை உறுதி செய்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தக் கடிதம் தான் வெளியுறவு அமைச்சுக்கு எழுதிய ஒன்று என்றும், அது எப்படி பொது ஊடகங்களின் பார்வைக்கு வந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply