மற்றுமாரு பெறுமதி மிக்க வாய்ப்பை தவறவிடாது ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், எதிர்காலத்துக்கான நல்ல சாத்தியத்தையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக பாராட்டியுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, மற்றுமொரு பெறுமதி மிக்க வாய்ப்பு தவறிப்போவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
தற்போதைய தருணத்தில் அமைதியும் நல்லிணக்கமும், மிகவும் முக்கிய அவசர தேவையாக இருக்கின்ற நிலையில், அந்த ஆணைக்குழுவின் சாத்தியமிக்க பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஆயர்களின் மாநாடு, கார்டினல் மல்கம் ரஞ்சித் தலைமையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் நோக்கில் குறைந்த பட்சம் குறியீட்டு அளவிலான நடவடிக்கைகளையாவது அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்ற ஆயர்கள் மாநாடு, இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மக்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் அவை இரு அதிகாரபூர்வ மொழிகளிலும் எல்லாருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.
சிங்களம் மாத்திரம் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி, மொழி விவகாரங்களை மிகவும் முக்கியமாக கருதி அரசாங்கம் கையாள வேண்டும் என்றும் அது கூறியிருக்கிறது.
சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன், ”மிகவும் வேதனையான காணாமல் போனவர்களின் விவகாரத்தை” அரசாங்கம் கையாள வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இலங்கை ஆயர்கள் மாநாடு கோரியுள்ளது.
இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களை முழுமையாக வெளியிடுவதன் மூலம்இ மக்கள் தமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா, இல்லாவிட்டால், அவர்கள் எப்போது உயிரிழந்தார்கள் என்பதையாவது அறிந்துகொள்ள முடியும் என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் தடுத்து வைக்கப்படாமல் காணாமல் போயிருப்பவர்கள் விடயத்தில், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதிலும், அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கிறது என்று கூறியுள்ள ஆயர்கள், மக்களின் சட்டரீதியிலான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உறவினர்களை இழந்தவர்களின் துயரங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தானவை என்றும், ஆழமாகப் பதிந்திருக்கக் கூடியவை என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நடைமுறைப்படுத்தப்படக்கூடிய பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கு ஒரு பொறுப்பான குழுவை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply