பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் சோஷலிச கட்சி வேட்பாளர் வெற்றி

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் சோஷலிச கட்சி வேட்பாளர் பிராங்காய்ஸ் ஹாலண்டே வெற்றி பெற்றுள்ளார். இப்போதைய அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி தோல்வியடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஹாலண்டேவுக்கு சுமார் 52 சதவீதமும், சர்கோஸிக்கு சுமார் 48 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

1995-க்குப் பிறகு சோஷலிச தலைவர் ஒருவர் பிரான்ஸ் அதிபராக தேர்வாவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து தங்கள் வெற்றியைக் கொண்டாடும் வழக்கமான இடமான தலைநகர் பாரீஸில் உள்ள லா பாஸ்டைல் பகுதியில் இடதுசாரி தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

பிரான்ஸ் தேசத்தின் பொருளாதார நெருக்கடிகளையும், சர்கோஸி மீதான அதிருப்தியையும் தனக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டார் ஹாலண்டே. இந்தத் தேர்தலின் தாக்கம் ஐரோப்பா முழுவதும் எதிரொலிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய யூனியனின் பொருளாதார திட்டங்களை மறு ஆய்வு செய்யப்போவதாக ஏற்கெனவே ஹாலண்டே தெரிவித்துள்ளார். பெரு நிறுவனங்களுக்கும், ஆண்டுக்கு 10 லட்சம் மில்லியன் யூரோவுக்கு அதிகமாக சம்பாதிப்போருக்கும் அதிக வரி விதிக்கப்படும் என்று ஏற்கெனவே அவர் கூறியுள்ளார்.

குறைந்தபட்ச ஊதியம், 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமனம், சில ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 62-லிருந்து 60-ஆக குறைப்பது ஆகிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யுஎம்பி கட்சிக்கு தம்மால் தலைமையேற்க முடியாது என்று சர்கோஸி தெரிவித்துவிட்டார். எனினும் ‘ஒன்றாக செயல்படுங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் நம்மால் வெல்ல முடியும்’ என்று கட்சியினரை அவர் உற்சாகப்படுத்தியுள்ளார்.

பதவியிலிருக்கும் அதிபர் ஒருவர் அடுத்த தேர்தலில் தோற்றுப் போவது 1958-வது ஆண்டுக்குப் பிறகு இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு வலேரி கிஸ்கார்ட் டி’எஸ்டெய்ங் என்ற அதிபர் 1981-ல் நடைபெற்றத் தேர்தலில் சோஷலிச வேட்பாளர் பிராங்காய்ஸ் மிட்டர்ரன்ட் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply