குடாநாட்டு புகையிரதப் பாதை செப்பனிடும் பணிகள் துரிக கதியில் ஆரம்பம்
யாழ். குடாநாட்டில் உள்ள புகையிரதப் பாதைகளை புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை – இந்திய நட்புறவின்படி நாட்டின் பல பிரதேசங்களிலும் புகையிரத போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் வட பகுதிக்கான புகையிரதப் பாதை மீள்புனரமைப்பு திட்டங்கள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
நீண்டகாலமாக பாவனையில் இல்லாத புகையிரத பாதைகளை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது பளையிலிருந்து காங்கேசன்துறை வரை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் பொறியிலாளர் சூரியன் தெரிவித்தார்.
புகையிரத பாதை அமைக்கப்படவுள்ள நிலப்பகுதியின் பலத்தை ஆராயும் மண்பரிசோதனையும் செய்யப்பட்டு வரும் அதேவேளை, வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் நகர் புறத்திற்கு வெளியே அமையும் புகையிரத பாதைகளின் வளைவுகளை சீர்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பளைத் தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான புகையிரத பாதைக்கு தேவையான தண்டவாளங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் பொறியிலாளர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிரத போக்குவரத்து சேவைகள் 2013ம் ஆண்டளவில் நடைபெறும் என யாழ். இந்திய துணைதூதுவர் வி.மகாலிங்கம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் புகையிரத பாதை வவுனியாவில் இருந்தும் மீளமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரிலிருந்து ஓமந்தை வரை அண்மையில் புகையிரத பாதை மீளமைக்கப்பட்டு புகையிரத சேவையும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply