பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளார்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளார். அங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு (பொதுச் செலவினங்களுக்கான நிதிக்குறைப்பு மற்றும் இதர சிக்கன அறிவிப்புகள்) ஒரு முடிவு கட்டப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு அளித்துள்ளார்.
யூரோ வலய நாடுகளுடன் தொடர்புடைய கடன்கள் விவகாரத்தில் ‘அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட புதிய திட்டமொன்றை’ முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் சோசலிஸ்ட் வேட்பாளர் ஃபிரான்ஸுவா 52 வீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்று வெற்றியடைந்தார்.
மத்திய-வலதுசாரியான நிக்கோலா சார்க்கோஸி தான் 1981ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது தவணைக்கான தேர்தலில் தோல்வியடைந்த முதல் பிரான்ஸ் அதிபராவார்.
ஜெர்மனி ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கலுடன் இணைந்து நிக்கோலா சார்க்கோஸி முன்னெடுத்த ஐரோப்பிய நாடுகளின் வரவுசெலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பான உடன்படிக்கையை மீளவும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் கோரியிருந்தார்.
வெற்றிபெற்றுள்ள புதிய அதிபரை தொலைபேசி மூலம் வாழ்த்தியிருக்கின்ற அங்கேலா மேர்க்கல், பேச்சுவார்த்தைக்காக விரைவில் ஜெர்மனிக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
‘ஐரோப்பாவின் நலன்களைக் கருத்தில்கொண்டு பிரான்ஸ்-ஜெர்மனி உறவுகளை பலப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கு’ இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஃபிரான்ஸுவா ஒல்லாந்தின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply