புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கான பாடசாலைகளை கல்வி அமைச்சே தீர்மானிக்கும் : கல்வியமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்படும் பாடசாலைகளில் கடமையாற்ற தயாராகவிருக்க வேண்டும். இல்லையேல் அவர்களுக்கான நியமனம் இரத்துச் செய்யப்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ஆயிரம் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய அநேக பட்டதாரிகளுள் ஆயிரம் பேர் மிகவும் சிறப்பான தொழில்நுட்ப நிபுணத்துவமடங்கிய குழுவினரால் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும், தெரிவு செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்ப பட்டதாரிகள் சேவைபுரிய வேண்டிய இடம், பாடசாலைகளை தீர்மானிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதனாலேயே நியமனங்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தெரிவு செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்ப பட்டதாரிகள் கடமையாற்ற வேண்டிய பாடசாலையினை கல்வியமைச்சே முழுமையாக தீர்மானிக்கிறதே தவிர இதில் பட்டதாரிகளின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம் வழங்கப்பட வில்லை எனவும் அமைச்சர் பந்துல கூறினார். ஆயிரம் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஒரே தடவையில் ஆசிரிய நியமனம் வழங்குவது இதுவே முதற்தடவையாகு மெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரிய நியமனம் பெறுவோர் அவர்களது மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் சேவையாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கப்படும் விதத்திலேயே ஒழுங்கு விதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் இல்லாத நிலையில் அதற்கு அண்மித்த இன்னுமொரு பிரதேசத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்டதாரி ஒருவர் அப்பாடசாலைக்குரிய ஆசிரியராக நியமிக்கப்படுவார். இது போன்று வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதி லுமுள்ள ஆயிரம் பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்ப பட்டதாரிகள் நியமிக்கப்படுவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் நாடு முழுவதும் தரமான பாடசாலைகளை உருவாக்க வேண்டுமெனும் திட்டத்தின் பிரகாரம் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதன்படி ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஆகக்குறைந்தது மூன்று பாடசாலைகள் வீதம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. பிரதேச செயலாளர் பிரிவுதோறுமுள்ள மாணவர்களை நகரத்திலுள்ள மாணவர்களுக்கு சமனான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
இந்நிலையில் அமைச்சினால் தீர்மானிக்கப்படும் பாடசாலையில் கடமையாற்ற விரும்பாத பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்துச் செய்யப்படுமென்பதில் அமைச்சு உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இப்பாடசாலைகளுக்கென மேலதிகமாக ஆயிரம் கணித ஆசிரியர்கள், ஆயிரம் விஞ்ஞான ஆசிரியர்கள் மற்றும் ஆயிரம் ஆங்கில ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, இரத்மலானையிலுள்ள கொத்தலாவலபுர மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டி வைத்தார். புதிதாக அமைக்கப்படும் இக்கட்டடம் கொத்தலாவல புர வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூடம், நூலகம், மொழிகள் மற்றும் கணித நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply