சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும்:ஜெயலலிதா
விடுதலை புலிகள்தான் இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் என்பதை நாங்கள் நம்பவில்லை என அ.தி.மு.க.பொது செயலர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியான ம.தி.மு.க, சி.பி.ஜ, சி.பி.எம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து ஆதரவு வழங்கியுள்ளனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கே செல்வி ஜெயலலிதா இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால், அவர்கள் அனைவருக்குமே எல்லா பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு. கருணாநிதியும் திருமாவளவனும் பேசி மேற்கொண்டதே இவ் உண்ணாவிரத நாடகம் என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
இதை பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் என்பதை நாங்கள் நம்பவில்லை. இலங்கை பிரச்சனையை பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கவேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply