அனுராதபுரம் சிறைச்சாலையில் நாம் கடுமையாகத் தாக்கப்பட்டோம் : மன்னார் நீதிமன்றத்தில் தமிழ்க் கைதிகள் சாட்சியம்

அநுராதபும் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளால் வயர்கள், பொல்லுகள் மற்றும் தடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் கைதிகள் தப்பியோடியிருந்தனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமுற்ற சிறைச்சாலை அதிகாரிகள் தம்மைக் கடுமையாகத் தாக்கியதாக இன்று திங்கட்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட தமிழ் சிறைக்கைதிகள் முறையிட்டனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளே இவ்வாறு கடுமையாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 15 பேரின் உடலில் ஆழமான தழும்புக் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தனித்தனியாக வவுனியா நீதிமன்றத்தில் இன்று வாக்குமூலம் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வவுனியா மாவட்ட நீதவான் ஆ.கி.அலக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

சிறைச்சாலையிலிருந்த தமிழ் கைதிகளின் ஆடைகள் களையப்பட்டு, பின்பக்கத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனைவரினது உடலிலும் 1 அடி நீளமான ஒன்றரை அங்குலம் அகலமான கண்டல் காயங்களும் காணப்படுவதாகத் தெரியவருகிறது.

அத்துடன், தமிழ் கைதிகளின் உடமைகள் அனைத்தும் எரியூட்டப்பட்டதுடன், அவர்கள் உடுத்துவதற்கு உடுதுணி எதுவும் இல்லாதநிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

தம்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றபோது சிறைச்சாலை அதிகாரியான அக்பர் என்பவர் மேல் மாடியில் பெண் ஒருவருடன் கூடி சிரித்தபடி சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

1983ஆம் ஆண்டு வெலிக்கடை, பூசா சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதோ அதேபோலவே தற்பொழுது அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply