இலங்கையில் ராணுவத்தை விட புலிகள்தான் அதிகளவில் தமிழர்களை கொன்றுள்ளனர் – ஞானசேகரன் எம்.எல்.ஏ

மதுரையில் ரயில் எரிப்பு, திண்டிவனம் அருகே இன்ஜின் எரிப்பு முயற்சி போன்றவை நடக்கின்றன. அன்றே புலிகள் ஆதரவு சக்திகளைக் கண்டித்திருந்தால், இன்று இந்த அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்காது ” என ஞானசேகரன் எம்.எல்.ஏ., கூறினார். இது குறித்து நிருபரிடம் அவர் கூறியதாவது : சினிமா டைரக்டர்கள் எல்லாம் நாட்டைப் பற்றி பேச துவங்கியுள்ளனர். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதாக கூறுகின்றனர்.

ஆனால், இலங்கையில் ராணுவத்தை விட விடுலைப் புலிகள்தான் அதிகளவில் தமிழர்களை கொன்று குவித்துள்ளனர். தமிழர்களை புலிகள் யுத்தத்தில் கேடயமாக பயன் படுத்தி கொண்டிருக்கின்றனர். புலிகள் இயக்கத்தில், பிள்ளைகளை சேர்க்க மறுக்கும் பெற்றோரை கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர். ஆனால், இங்கே புலிகளை, “போராளிகள்’ என ராமதாஸ் கூறுகிறார். திருமாவளவன் போன்றோர் ஆதரித்துப் பேசுகின்றனர்.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு, வெளிப்படையாகவே புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசுவது, பேரணி நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டன.ஒன்றரை ஆண்டுக்கு முன், “புலிகளை அன்றும், இன்றும் இனி என்றும் ஆதரிப்பேன்’ என வைகோ பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது சட்டசபையில் பேசி விட்டு அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.அப்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி போன்றவர்கள் எங்களுடைய அறைக்கு வந்து சமாதானம் செய்தனர்.

முதல்வர் கருணாநிதி ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றார். அதன் பின் சென்னையில் நடந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் ஒருபடி மேலே போய், பிரபாகரனைப் போல உடை அணிந்து, ஆதரித்து பேசிய போதும், அவர் மீது நடவடிக்கை இல்லை. சட்டம் தன் வேலையை சரியாக செய்யாத காரணத்தினால் தான் இப்போது மதுரையில் ரயில் பெட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் ரயில் இன்ஜின் எரிப்பு முயற்சி நடந்துள்ளது. அன்றே சட்டம் தன் கடமையை செய்திருந்தால் இது போன்ற நிகழ்ச்சி இப்போது நடந்திருக்காது.

ராஜிவ் கொலையாளிகளைப் பாராட்டுகிறவர்களைப் பார்த்து காங்கிரஸ் கொதித்துப்போய் உள்ளது. “இலங்கையில் தமிழர்களை தாக்க வேண்டாம்’ என்று பிரதமர் மன்மோகன் சிங், சோனியா இலங்கை அரசிடம் சொல்ல முடியும். ஆனால், “போரை நிறுத்துங்கள்’ என சொல்ல முடியாது. மாநிலங்களுக்கு இடையே உள்ள தண்ணீர் பிரச்னையை பேசி தீர்க்க முடியாதவர்கள், அயல்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என பேசுகின்றனர்.ராஜிவ் கொலையில் முதல் குற்றவாளியான பயங்கரவாதி பிரபாகரனை இன்னும் கைது செய்யவில்லை. “உலக மக்களின் தலைவர் பிரபாகரன் என்கின்றனர். தனித்தமிழ்நாடு வேண்டும்’ என தேச விரோதமாக பேசுகின்றனர். புலிகளிடம் இருந்து வரும் கோடிக்கணக்கான பணத்துக்காக இங்கே இப்படி சிலர் பேசுகின்றனர். புலிகளை ஆதரித்து பேசுகின்றவர்கள் மீதும், ஆதரிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். இவ்வாறு ஞானசேகரன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply