இளைஞர்கள் இறுதி நடவடிக்கைக்கு இராணுவத்தில் இணையுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்:இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா

முல்லைத்தீவை படையினர் கைப்பற்றியதை அடுத்து குறுகிய கிலோ மீற்றர் பரப்புக்குள் புலிகளின் செயற்பாடுகள் முடக்கி விடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றுத் தெரிவித்தார்.புலிகளுடனான படை நடவடிக்கையில் 95 சதவீத வெற்றியை படைத்தரப்பு கண்டுள்ளதாகத் தெரிவித்த அவர் வெகு விரைவில் இறுதி வெற்றியை அடைய முடியும் என்று நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவைப் படையினர் கைப்பற்றியதை நாட்டு மக்களுக்கு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்த இராணுவத் தளபதி, இந்த வெற்றியை நாட்டு மக்கள் சகலரும் இணைந்து தேசிய கொடியை ஏற்றி இந்த மாதம் முழுவதையும், வெற்றி வாரமாகக் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தேசத்தின் விருத்திக்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமாறு இளம் சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்த அவர், இந்த வெற்றிக்காக பாடுபட்ட படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றிகள் உரித்தாவதாகவும் குறிப்பிட்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:- மிக நீண்ட காலமாக சகலரும் எதிர்பார்த்திருந்த பாரிய வெற்றி தொடர்பாக மிகவும் சந்தோசத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கை இராணுவம், தீவிரவாதிகளின் பலமான கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவை கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் நேற்று  கைப்பற்றியுள்ளனர்.

இந்த வெற்றி தொடர்பாக இராணுவத் தளபதி என்ற வகையில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.

பூநகரி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, தர்மபுரம், இராமநாதபுரம் என்ற முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தற்போது கைப்பற்றியுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் முல்லைத்தீவு அமைந்துள்ளது.

முல்லைத்தீவிலுள்ள காட்டுப்பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றிய படையினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பதுங்கு குழிகளையும், மண் அரண்களையும் கைப்பற்றி முல்லைத்தீவு நகருக்குள் பிரவேசித்தனர்.

முல்லைத்தீவை புலிகளிடமிருந்து விடுவிக்கும் படை நடவடிக்கைகளை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தின் 59வது படைப்பிரிவினர் ஆரம்பித்தனர். ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் 40 கிலோ மீற்றர் பரப்பைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த வெற்றி தொடர்பாக நாங்கள் பெருமை அடைகின்றோம்.

புலிகள் தற்பொழுது 25 கிலோ மீற்றர் நீளமும் 15 கிலோ மீற்றர் அகலமும் பரப்பைக் கொண்ட மிகச் சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தையும் வென்றெடுத்து புலிகள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ள ஒன்றரை இலட்சம் மக்களை காப்பாற்றுவேன் என்று உத்தரவாதம் வழங்குகின்றேன்.

இந்த வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினதும் சரியானதும், சிறப்பானதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளுமே பிரதான காரணமாகும்.

அதேபோன்று இந்த நடவடிக்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்த வீரர்களையும் எமக்கு இந்த சந்தர்ப்பத்தில் மறக்க முடியாது.

முல்லைத்தீவை விடுவிப்பதற்கான ஒருவருட கால படை நடவடிக்கைகளில் தாய் நாட்டுக்காக தனது உயிர் நீத்தவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றியுடனும், கெளரவத்துடனும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.

அதேசமயம் எமது இந்த இராணுவ நடவடிக் கைகளுக்கான இறுதிக் கட்டத்தில் புலிகளின் பதுங்கு குழிகளை நிர்மூலமாக்கி படை முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய விமானப் படையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று ஆரம்பத்திலிருந்து எமக்கு மக்கள் மூலம் கிடைத்த ஒத்துழைப்பும் மக்களது பிரார்த்தனைகளும் இந்த வெற்றிகளுக்கு மற்றுமொரு காரணமாகும். அத்துடன் 2 வருட காலத்திற்குள் 80 ஆயிரம் வரையான இளைஞர்கள் படையில் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். நாட்டிலுள்ள சகல இளைஞர்களும் இன்னும் முன்வர வேண்டும் என்றும் இறுதி நடவடிக்கைகளில் இராணுவத்தில் இணையுமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply