அரச பகுதிக்கு செல்ல விரும்பும் மக்களின் விருப்பத்தை புலிகள் நிராகரிக்க கூடாது:ஜப்பானிய தூதுவர் யசூசி அகாஷி

வடக்கில் சிவிலியன்களை பாதுகாப்பதற்கும் இடம் பெயர்ந்தோருக்கு நிவாரணமளிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜப்பானிய தூதுவர் யசூசி அகாஷி திருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த யசூசி அகாஷி திருகோணமலைக்கும் வவுனியாவுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்து விட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனது விஜயத்தின் நிறைவில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய யசூசி அகாஷி, அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு செல்லவிரும்பும் பொதுமக்களின் சுதந்திரத்தை புலிகள் நிராகரிக்கக் கூடாதெனவும் கேட்டுக் கொண்டார்.

சிவிலியன்களையும், ஐ.நா பணியாளர்களையும் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் முடக்கி வைத்திருக்கும் புலிகளின் செயல்பாடுகள் குறித்து தமது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

அந்த பிரதேசத்தில் வாழ்பவர்களின் சுதந்திரமான வெளியேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அகாஷி சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சமாதானத்தை கட்டி யெழுப்புவதற்கும் அபிவிருத்திக்கும் ஏனைய சர்வதேச நாடுகளோடு இணைந்து ஜப்பான் தொடர்ந்து முக்கிய பங்காற்றுமென்றும் அகாஷி தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்புக் குறித்தும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் ஜப்பான் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமென்றும் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சர்வதேச பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமாதான முன்னெடுப்பு தொடருமென நம்பிக்கை தெரிவித்த அகாஷி, அரசியல் தீர்வொன்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியுமென வலியுறுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply