பிரபாகரனை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர் உயிருடன் பிடிக்க முயற்சி

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத் தீவை பிடிக்க சிங்கள ராணுவம் கடந்த சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தியது.விடுதலைப்புலிகளின் கடைசி தலைமையிடமாக செயல்பட்ட முல்லைத்தீவுக்குள் இலங்கை ராணுவம் நேற்று புகுந்தது. கடந்த 1996-ம் ஆண்டு முல்லைத்தீவை விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அது முதல் முல்லைத்தீவு விடு தலைப்புலிகளின் முக்கிய ராணுவ தளமாக விளங்கியது.

கடும் தாக்குதல் நடத்தி 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது முல்லைத்தீவை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டு விட்டதாக ராணுவம் நேற்று அறிவித்தது. இதுபற்றி ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறும் போது “விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் 95 சதவீதம் முடிந்துவிட்டது. ஆனாலும் முல்லைத்தீவில் மற்ற ஒரு சில பகுதிகளில் மட்டும் சண்டை நீடிக்கிறது.

ஆனாலும் பெரும்பாலான பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன.

முல்லைத்தீவு பிடிபட்டு விட்டதால் விடுதலைப்புலி தலைவர் எங்கே இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுபற்றி இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா மற்றும் ராணுவ தளபதிகள் கூறும் போது “பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அவர் இனி தப்பி ஓட முடியாது. ஏற்கனவே அவர் ஒரு பதுங்கு மிடத்தில் இருந்து இன்னொரு பதுங்கு மிடத்துக்கு பல தடவை தப்பி ஓடினார் அவர் இப்போது வன்னியில் பதுங்கி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

ஆனால் பிரபாகரன் உயிருடன் பிடிபடுவதை ஒரு போதும் விரும்ப மாட்டார் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் ராணுவம் பிடித்த பகுதிகளை சுற்றிக் காட்ட பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு ராணுவத்தினர் ஒரு ஹெலிகாப்டரில் சென்றனர். அந்த ஹெலிகாப்டர் மீது விடுதலைபுலிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்த ராணுவ ஹெலிகாப்டர் மயிரிழையில் தப்பியது.

ராணுவ அதிகாரி ஒருவர் மேலும் கூறும் போது “பதுங்கு குழியில் தங்கி இருக்கும் போது பிரபாகரன் பிடிபடும் சூழ்நிலை ஏற்பட்டால் தன்னை சுட்டுக் கொன்று விடும்படி தனது உதவியாளர்களுக்கு அவர் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

பிரபாகரன் மலேசியா போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடி இருக்கலாம் என்று கூறப்படுவதையும் அந்த ராணுவ அதிகாரி மறுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply