மிக மிக கவனம் செலுத்தாது விடின் இழப்புகளைத் தவிர்க்க முடியாது போகும். – ஐ.நா

தொடரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள சூழ்நிலையானது, பெரும் நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளதாகவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நீல் புஹ்ன் ஏ.பி. செய்திச் சேவைக்கு திங்கட்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது.

அண்மைய வாரங்களாக அரசாங்கப் படையினர் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, ஒரு சிறிய காட்டுப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் சிறைபடச் செய்துள்ளனர். புலிகள் பலம்பெற்று விளங்கிய இறுதிப் பிரதேசமான முல்லைத்தீவை இராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாகவும், தொடர்ந்து திங்கட்கிழமை முழுவதும் காடுகளிலுள்ள புலிகளுடன் உக்கிர மோதல்களில் ஈடுபட்டதாகவும் இராணுவம் தெரிவித்தது.

போர் வலயம் சுருங்கியுள்ளதுடன், அப்பிரதேசத்தில் பெருந்தொகையான பொதுமக்கள் உள்ளனர். அண்மைக் காலமாக அங்கு நிலைமை மிக மோசமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக பொதுமக்கள் பலர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர், இது உண்மையிலேயே தற்போது ஒரு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலம் வரை பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க மோதல்களில் ஈடுபடும் இரு தரப்பினருமே கடுமையாகப் பாடுபட்டனர். ஆனால், பெருமளவு மக்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெற்று வரும் தற்போதைய சூழ்நிலையில், இது தொடர்பில் மிக மிக கவனம் செலுத்தாது விடின் இழப்புகளைத் தவிர்க்க முடியாது போகும்.

அண்மைக் காலமாக வட பகுதியிலுள்ள பொது மக்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைக் குழுக்களும் இராஜதந்திரிகளும் கூடிய கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் போர் வலயத்திலிருந்து வெளியேறுவதிலிருந்து விடுதலைப் புலிகள் தடுப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

அரசாங்கமானது தன்னிச்சையாக புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பிராந்தியமொன்றைப் பாதுகாப்பு வலயமாக கடந்த வாரம் பிரகடனப்படுத்தியதுடன் பாதுகாப்பளிக்கப்பட்ட அப்பிரதேசத்திற்கு அனைத்து பொதுமக்களையும் செல்லுமாறு அழைப்பு விடுத்தது.

ஆனால், அப்பிராந்தியத்தில் ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து அநேக அறிக்கைகள் கிடைக்கப்பெற்றன . அண்மைய நாட்களில் பாதுகாப்பு வலயத்தில் மோதல்கள் இடம்பெறுவது வழமையாக உள்ளது என்பதுடன் இதற்கு யார் பொறுப்பு என மதிப்பீடு செய்வது எமக்கு கஷ்டமாக உள்ளது.

பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராணுவம் திரும்பத் திரும்ப மறுப்புத் தெரிவித்து வருகிறது நாங்கள் அந்த பாதுகாப்பு வலயத்தில் இலக்கு வைக்கவில்லை எனவும் புலிகள் தமது ஆயுதங்களுடன் பாதுகாப்பு வலயத்துக்குச் சென்று அங்கிருந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்று பிரிகேடியர் தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply