வீடுகள் மீளக்கட்டித் தரப்பட்டால் யாழ் செல்வோம் குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்

மோதல்கள் காரணமாக அழிக்கப்பட்டிருக்கும் தமது வீடுகள் மீண்டும் அமைத்துத் தரப்படுமாயின் அங்கு சென்று வாழ்வதற்குத் தயாராக இருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 18 வருடங்களாக இடம்பெயர்ந்திருக்கும் முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர். 

யாழ் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 18வது வருடாந்த நிறைவு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை புத்தளத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியா, மலேசியா, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ் குடாநாட்டிலிருந்த முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் புத்தளம், மன்னார் ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கின்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய 100,000ற்கும் அதிகமான முஸ்லிம்கள் புத்தளம் மற்றும் மன்னார் பகுதிகளில் 161 முகாம்களில் தங்கியிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார்.

எனினும், துரதிஸ்டவசமாக வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லையென ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள தமது வீடுகள் மோதல்களால் அழிக்கப்பட்டிருக்கும் எனவும், எனினும், வீடுகள் மீள அமைத்துக்கொடுக்கப்பட்டால் அங்கு சென்று குடியேறத் தயாராக இருப்பதாகவும் குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியிருக்கும் வி.அகுமுதீன்  கூறினார்.

தமது கிராமத்தின் தற்போதைய நிலமையைப் பார்ப்பதற்கு அங்கு செல்லவிரும்புவதாக மன்னாரில் இடம்பெயர்ந்திருக்கும் பாத்திமா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply