மஹிந்த சிந்தனை வெற்றி பெற்றிருக்காவிட்டால் புலிகள் சிலாபம் வரைக்கும் பிடித்திருப்பார்கள்:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

நாட்டு மக்கள் இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் மஹிந்த சிந்தனையை வெற்றிபெறச் செய்திராவிட்டால் புலிகள் இக்கத்தினர் சிலாபம் கொச்சிக்கடை பாலம் வரையும் பிடித்திருப்பார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.மஹிந்த சிந்தனை வெற்றிபெறச் செய்யப்பட்டதால் சிலாபம், புத்தளம் மக்கள் புலிகள் இயக்கத்தினருக்கு கம்பம் செலுத்தவென உருவாகவிருந்த சூழல் தவிர்க்கப்பட் டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

வட மேல் மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட பிரதான தேர்தல் பிரசார கூட்டம் சிலாபம் ஹரேந்திர கொரயா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செய்மதி ஊடாக ஜனாதிபதி மாளிகை யிலிருந்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:-

பயங்கரவாதத்தை இந்நாட்டிலிருந்து முழுமையாகத் துடைத்தெறியும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் இப்போது முன்னெடுக்கப்படுகின்றன, அடுத்துவரும் சில தினங்களில் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மிளிரும்.

இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் மஹிந்த சிந்தனையை வெற்றிபெறச் செய்ததால் தான் இந்த இலக்கை எம்மால் அடைய முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால் சிலாபம், கொச்சிகடை வரையும் புலிகள் இயக்கத்தினர் பிடித்திருப்பர். புத்தளம், சிலாபம் வாழ்மக்கள் புலிகள் இயக்கத்தினருக்கு அடிமையாக கப்பம் செலுத்த நேர்ந்திருக்கும். இந்த நிலையிலிருந்து இப்பகுதி மக்களை நாம் பாதுகாத்துள்ளோம்.

முன்னாள் அமைச்சரான மறைந்த த.மு.தஸநாயக்கா புத்தளம் மாவட்ட மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தவர். மஹிந்த சிந்தனையை வெற்றிபெறச் செய்வதற்காக பெரிதும் உழைத்தவர். அவரையும் புலிகள் இயக்கத்தினரே படுகொலை செய்தனர். இம் மாவட்டத்துடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயையும் புலிகள் தான் படுகொலை செய்தனர்.

மறைந்த அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த.மு. தஸநாயக்கா போன்றோர் உயிருடன் இருந்திருந்தால் பாதுகாப்பு படையினர் அடைந்துவரும் வெற்றிகளையிட்டு பெரிதும் அகமகிழ்ந்திருப்பர்.

எமது காலப் பகுதியில் வட மேல் மாகாணத்திலும் குறிப்பாக புத்தளம் மாவட்டத்திலும் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு பிரதேசத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்திகளை எல்லாப் பிரதேசங்களுக்கும் கொண்டு சென்றிருக்கிறோம். புத்தளம், சிலாபம், மாரவில ஆஸ்பத்திரிகள் மில்லியன் கணக்கான ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இவ்வருடத்தில் புத்தளம் ஆஸ்பத்திரியில் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை அமைக்க தீர்மானித்துள்ளோம். கொழும்பு மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை நாட்டில் வசிக்கும் சகல மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

நுரைச்சோலையில் அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதன் விளைவாக அங்கு பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டத்தை இன்னும், இன்னும் அபிவிருத்தி செய்ய முடியும். இதற்காக கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று இம்மாவட்டத்தின் அபிவிருத்தியையும் எதிர்கால சந்ததியினரையும் கருத்தில் கொண்டு வெற்றிலைச் சின்னத்தை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, சுசில் பிரேம ஜயந்த், டாக்டர் ராஜித சேனாரட்ன, மில்ரோய் பெர்னாண்டோ, ஹேம குமாரநாணயக்கார பாட்டலி சம்பிக்க ரணவக்க, திஸ்ஸ கரலியத்த, பீலிக்ஸ் பெரேரா, நஜீப் ஏ. மஜீத், பிரதியமைச்சர்கள் கே. ஏ. பாயிஸ், நியூமால் பெரேரா, பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, விமல் வீரவன்ச எம்.பி. கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இவ்வைபவத்தில் ஐ.ம. சு. முன்னணியில் போட்டியிடும் அபேட்சகர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். கடந்த ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் முதலாமிடத்தைப் பெற்ற புத்தளம் சென் அன்ரூஸ் ஆரம்ப பாடசாலை மாணவி சுபிபி மஹேலாவுக்கு இவ்வைபவத்தில் பரிசிலும் வழங்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply