அவுஸ்திரேலியாவை இலக்காக் கொண்ட அகதிகள் உண்ணாவிரதம்

அவுஸ்திரேலியாவின் வடமேற்கே கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமொன்றிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட முன்னதாக தமது கோரிக்கையை பரிசீலிப்பதற்காக பசிபிக் தீவான நவ்றூவுக்கு தம்மை அனுப்பிவைக்கும் ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைக்கு எதிராகவே அவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல ஆண்டுகளுக்கு நவ்றூ தீவிலேயே தங்கிவிட நேரிடும் என்று அஞ்சுவதாக தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் கூறினார்.

பாதுகாப்பற்ற படகுப் பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் வரமுயற்சிப்போரை தடுத்து வைப்பதற்காக நவ்றூ மற்றும் பப்புவா நியு கினி ஆகிய இடங்களில் விசாரணை மையங்களை திறப்பதற்கு அண்மையில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆபத்தான கடற்பயணங்கள் மூலம் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கோடு இந்த இரண்டு தொலைதூரத்து தடுப்பு முகாம்களும் திறக்கப்படுவதாக ஆஸ்திரேலியா கூறுகிறது.

இனிமேலும் படகுகளில் ஏறி அவுஸ்திரேலியா நோக்கி வருபவர்கள் நேராக இந்த தடுப்பு முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தாம் தங்கியிருக்கும் இடைத்தங்கல் இடங்களிலேயே தங்கியிருந்து சட்டரீதியான வழிமுறைகளில் தஞ்சம் கோருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசு அதன் சுயாதீன ஆணைக்குழுவொன்றின் பரிந்துரையின்பேரில் தான் ஏற்றுக்கொள்கின்ற அகதிகளின் எண்ணிக்கையை 40 வீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply