முன்னேஸ்வரம் மிருகபலி விவகாரம்! ஜனாதிபதியின் கவனத்திற்கு
இலங்கையில் வடமேல் மாகாணத்தில் சிலாபம் நகருக்கு அருகே அமைந்திருக்கின்ற புகழ்பெற்ற முன்னேஸ்வரம் காளிகோயிலில் எதிர்வரும் முதலாம் திகதி மிருகபலி பூஜையை நடத்தக் கூடாது என்று பௌத்த அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.
இந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக தாம் நடத்திவரும் மிருகபலி பூஜை மற்றும் வேள்வியை இம்முறையும் நடத்துவதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தாம் ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
வேள்வி பூஜையை நடத்தக்கூடாது என்றுஅமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரிடமிருந்து தமக்கு வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு பூஜையை நடத்தக்கூடாது என்று தம்மிடம் கூறினால் அதனை ஏற்கத்தயார் என்று கோயிலின் தலைமை மதகுரு காளிமுத்து சிவபாதசுந்தரம் சுட்டிக்காட்டினார்.
நேற்று காலை முன்னேஸ்வரம் கோயிலின் திருவிழா பூஜைகள் நடந்துகொண்டிருந்தபோது, சிலாபம் நகரிலிருந்து கோவில் முன்றலுக்கு ஊர்வலமாக வந்த பௌத்த பிக்குகள் அடங்கலாக நூற்றுக்கணக்கானோர் கோயிலில் மிருகபலி பூஜையை நடத்தக்கூடாது என்று கோசமிட்டார்கள்.
முன்னேஸ்வரம் சிவன் கோயில் முன்றலில் நின்று கோசமிட்டவர்கள் பின்னர் பலிபூஜை நடக்கவுள்ள காளிகோயில் பகுதிக்குள் நுழையமுற்பட்டபோது அதற்கு அங்கு கூடியிருந்த பொலிசார் அனுமதிக்கவில்லை என்று கோயில் நிர்வாகத்தினர் கூறினா்.
அதன்பின்னர் திரும்பிச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் திரும்பிவந்து தகராற்றில் ஈடுபடமுனைந்த போது, அவர்களுக்கும் அங்கு கோயிலில் கூடியிருந்த பொதுமக்களுக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டபோது பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.
ஜாதிக்க சங்க சம்மேளனய என்கின்ற பௌத்த அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்திய இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் தெற்கே காலிஇ மாத்தறைஇ தங்கல்ல போன்ற தூர பிரதேசங்களிலிருந்து 6 பஸ்களில் வந்தவர்களே கலந்துகொண்டதாகவும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
கடந்த ஆண்டில் முன்னேஸ்வரம் காளிகோயிலில் மிருகபலி கொடுப்பதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
அவ்வேளையில் கோயில் வளாகத்துக்குள் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு பலி பூஜைக்காக காத்திருந்த மிருகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பூஜையை தடுத்திருந்தார்.
இம்முறையும் இந்த பலிபூஜை நடக்கக்கூடாது என்றும் அப்படி நடந்தால் அதனை தான் தடுக்கவுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply