இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் முன் போராட்டம்: சீமான் கைது
பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு செந்தூரான் கெங்காதரன், பிரதீபன், சாந்தகுமார், ஜெயமோகன், பரமேஸ்வரன், தர்சன், பகிரதன் ஆகிய 8 பேர் அடைக்கப்பட்டனர்.
செந்தூரான் என்பவர் கடந்த 4-ந்திகதி செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து பூந்தமல்லி முகாமுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னை விடுதலை செய்யக்கோரி கடந்த 6-ந்திகதி முதல் இங்கு தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது.
அதை தொடர்ந்து நேற்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாம்களை இழுத்து மூடும் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.
குமணன் சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கரையான்சாவடி அகதிகள் முகாமை முற்றுகையிட சீமான் தலைமையில் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்களை பொலிஸ் துணை கமிஷனர்கள் மகேஷ்குமார், பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்தனர். அவர்களை வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர்.
மறியல் போராட்டம் நடந்த குமணன் சாவடி பஸ் நிறுத்தம் அருகே 100-க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டு அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கரையான்சாடி அகதிகள் சிறப்பு முகாமிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply