ஆப்கானில் 17 பேர் கோரமாக படுகொலை
ஹெல்மண்ட் பிராந்தியத்தின் மூஸா கலா மாவட்டத்தில் சாலையோரத்திலிருந்து 2 பெண்களும் 15 ஆண்களுமாக 17 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இச்சடலங்கள் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்டோ அல்லது குரல்வளை அறுக்கப்பட்டோ கிடந்தன. சில சடலங்களில் கடுமையாக தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும், துப்பாக்கிக் குண்டு துளைத்த காயங்களும் இருந்தன.
இப்பகுதி தாலிபான்களின் பிடியில் உள்ள இடம் என்பதால் இச்சம்பவம் பற்றிய தகவல்கள் மந்தமாகத்தான் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அப்பகுதி பெண்கள் இருவர் யாருக்கு சொந்தம் என்று இரண்டு தாலிபான் தளபதிகள் இடையில் ஏற்பட்ட தகராறு இந்தக் கொடூரமான வன்முறையில் முடிந்தது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் ஆட்டம் பாட்டம் என கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு தாலிபான் தளபதிகள் வெறித்தனமாக வழங்கிய தண்டனையின் விளைவு இது எறும் வேறு சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இந்த வெறிச் செயல் தாலிபான்களின் கைங்கரியம்தான் என்பதைத் தன்னால் உறுதி செய்ய முடியும் என ஹெல்மண்ட் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து பழகுவதை தாலிபான்கள் அனுமதிப்பதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
காபுல் நகரில் உள்ள பிபிசி முகவரோ, உள்ளூர் அரசாங்கத்துக்கு வேலைபார்த்த காரணத்தால் இவர்கள் இலக்குவைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்று சில செய்திகள் கூறுவதாகத் தெரிவிக்கிறார்.
சோதனைச் சாவடியில் தாக்குதல்
இதனிடையே, ஹெல்மண்ட் மாகாணத்தின் தென்பகுதியில் திங்கட்கிழமை காலை படையினரின் சோதனைச் சாவடி ஒன்றில் தாலிபான் ஆயுததாரிகள் நடத்திய பாரிய தாக்குதல் ஒன்றில் ஆப்கானிய சிப்பய்கள் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 200 தாலிபான் ஆயுததாரிகள் இத்தாக்குதலை நடத்தினர். அதிலே 11 பேர் அங்கு நடந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
வாஷிர் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் நான்கு சிப்பாய்கள் காயமடைந்தனர், ஆறு பேரைக் காணவில்லை.
இவர்கள் கடத்தப்பட்டார்களா, தானாக விரும்பி தாக்கியவர்களுடன் சென்றார்களா என்பது தெளிவாக இல்லை என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பச்சை சட்டைக்காரர்கள் நிலச்சட்டைக்காரர்கள் மீது நடத்தும் தாக்குதல்
இவைதவிர, நாட்டின் கிழக்கிலுள்ள லக்மான் பிராந்தியத்தில் ஆப்கானியச் சிப்பாய் ஒருவர், அமெரிக்கச் சிப்பாய்கள் இருவரை சுட்டுக் கொன்றுள்ளார் என்றும், பின்னர் இவரை நேட்டோ துருப்புகள் கொன்றுவிட்டதாகவும் ஆப்கானிலுள்ள நேட்டோ படைகள் கூறுகின்றன.
இந்த ஆண்டு இவ்வகையில் ஆப்கானிய சிப்பாய்களால் கொல்லப்படும் வெளிநாட்டு துருப்பினரின் எண்ணிக்கை மொத்தம் 42 ஆகியிருக்கிறது.
துருப்பினரின் சீறுடை நிறத்தை வைத்து கிரீன் ஆன் புளு அதாவது பச்சை சட்டைக்காரர்கள் நிலச்சட்டைக்காரர்கள் மீது நடத்தும் தாக்குதல் என இவ்வகையான தாக்குதல்கள் வருணிக்கப்படுகின்றன.
இத்தாக்குதல்களில் பலவற்றில் தங்களுக்கு பங்கு இருப்பதாக தாலிபான் கூறுகிறது ஆனால் கலாச்சார மாச்சரியங்களும் தனிப்பட்ட பகையுணர்வும்கூட இவற்றுக்கு காரணம் என்று நேட்டோ கூறுகிறது.
ஆப்கானில் மூன்றரை லட்சம் பச்சை சட்டைக்கார உள்நாட்டுத் துருப்புகள் இருக்க சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் நீல சட்டைக்கார நேட்டோ துருப்புகள் உள்ளன.
சண்டையிடுவதற்கான நேட்டோ துருப்பினர் 2014ஆம் ஆண்டோடு ஆப்கானிலிருந்து விலக்கிகொள்ளப்படவுள்ளனர்.
அதன் பின்னர் அங்கு ஆப்கானிய படைகளுக்கு பயிற்சி வழங்கக்கூடிய சர்வதேச துருப்பினர் மட்டுமே இருப்பர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply