கல்வி அமைச்சர் காவல்துறை மாஅதிபரிடம் முறைப்பாடு

நாட்டின் கல்வித் துறை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கைக்கு எதிராக சதி செய்பவர்கள் தொடர்பாக ஆராயும்படி கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, காவல்துறை மா அதிபர் எம்.கே. இளங்கக்கோனிடம் கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார்.

அண்மைக்காலமாக திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பலவிதமான கற்பனை கதைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களையும் மக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பரப்பி பிழையான வழியில் இட்டுச் செல்கின்றனர்.

அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த ஆசிரியர் தொழில் சங்கங்களின் பிரமுகர்கள், 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையும் தவறான முறையில் இடம்பெற்றதாக குறிப்பிட்டதையும் கல்வி அமைச்சர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது வேண்டும் என்றே நாட்டின் கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு சூழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த செயல்பாடுகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவை சுட்டிக்காட்டப்படுமானால், அதற்கு பொறுப்பானவர்கள், எந்த தராதரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த வருடம் 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில், இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பரிட்சை ஆணையாளர், ரகசிய காவல்துறையினருக்கு முறையிட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜயசிங்க, இந்த முறை இடம்பெற்ற 5ஆம் தர பரீட்சையினை ரத்து செய்து, மீண்டும் பிறிதொரு பரீட்சையை நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.

பரீட்சைக்கு முன்னதாக, வினாத்தாள்கள் வெளியானதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது தொடர்பாக பரீட்சசை ஆணையாளருக்கு எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாகவும் மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply